கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்ணாண்டோ 96 ரன்னும், குசல் மெண்டிஸ் 59 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பின்னர் இந்தியாவின் ரியான் பராக் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் 10 முதல் 15 ரன்கள் குறைவாக கொடுத்திருக்கலாம். இதில் நான் கொஞ்சம் ஏமாற்றம் அடைகிறேன். முதல் 25 ஓவர்களில் பந்து கொஞ்சம் கூட திரும்பவில்லை. அப்படியே நிலைமை நீடித்திருந்தால் 300 ரன்கள் கூட சென்றிருக்கலாம்.
ஆனால் இதற்கு அடுத்து பந்து நன்றாகத் திரும்ப ஆரம்பித்தது. ஒரு நல்ல ஸ்கோருக்கு அவர்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். இது எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களின் பெரும் முயற்சியாகும். நான் எந்த நிலையில் பேட்டிங் செய்வேன் என்று இப்போது தெரியவில்லை. ஏதாவது (ஆறு அல்லது ஏழு) ஒரு இடத்தில் விளையாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.