புதுடெல்லி: டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) கடந்த 26-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுருக்கு ஆறுதல் கூறினர்.
மன்மோகன் சிங்குக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் உபிந்தர் கவுர் (65), ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றுகிறார். 2-வது மகள்தாமன் கவுர் (61) பிரபல எழுத்தாளர். 3-வது மகள் அம்ருத் கவுர் (58), அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு சட்ட பள்ளியில் பேராசிரியையாக பணியாற்றுகிறார். அவர் அமெரிக்காவில் இருந்து கடந்த 27-ம் தேதி டெல்லி திரும்பினார்.
குடும்பத்தினர், உறவினர்களின் அஞ்சலிக்கு பிறகு, மன்மோகன் சிங் உடல் நேற்று காலை அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
காலை 10 மணி அளவில் இறுதிஊர்வலம் தொடங்கியது. உடல்கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா உள்ளிட்டோர் இருந்தனர்.யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதிக்கு மதியம் 12 மணிக்கு மன்மோகன் சிங் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெல் வாங்சுக், காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் ஆதிஷி, முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மன்மோகன் சிங் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது மனைவி குர்சரண் கவுரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு, 21 குண்டுகள் முழங்க மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மூத்த மகள் உபிந்தர் கவுர்தீ மூட்டினார். சீக்கிய மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நடந்தன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் உள்ளிட்ட தலைவர்களும் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.