நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்களில் உள்ள குருத்வாராக்களில் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி பதவி யேற்றார். அதன்பின், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பவர்கள், விசா முடிந்தும் தங்கியிருப்பவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ட்ரம்ப் தொடங்கி உள்ளார். அதன்படி, கடந்த சில நாட்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்களில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள சீக்கியர் களின் குருத்வாராக்களில் போலீஸார் மற்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். குருத்வாராக்களில் யாராவது சட்ட விரோதமாக தங்கியுள் ளனரா, கிரிமினல்களுடன் தொடர்பு வைத்துள்ளனரா போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதேபோல் சர்ச்களிலும் போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சொந்த நாட்டில் கொலை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்களில் தொடர்புள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வந்திருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கிரிமினல்கள் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அமெரிக்க பள்ளிகள், சர்ச்களில் இனிமேலும் ஒளிந்து கொள்ள முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள், அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குருத்வாராக்களில் சோதனை நடத்துவது, எங்கள் மத நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும் என்று அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்க சீக்கியர்கள் சட்டப் பாதுகாப்பு மற்றும் கல்வி நிதியம் என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
வாரன்ட் இருந்தோ அல்லது வாரன்ட் இல்லாமலோ குருத் வாராக்களைக் கண்காணிப்பது, சோதனையிடுவது போன்ற செயல்கள் எல்லாம் சீக்கியர் மத நம்பிக்கையின்படி ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.