புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் (ஏஎம்யு) இந்து மாணவர்கள் ஹோலி கொண்டாட அனுமதிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்துத்துவா அமைப்பினர் விடுத்த மிரட்டலால் ஏஎம்யுவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசின் பல்கலைக்கழகமான ஏஎம்யுவில் ஹோலி கொண்டாட்டங்களை நடத்த சில இந்து மாணவர்கள் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் வளாகத்தில் ஹோலி விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், இதற்காக அனுமதி கேட்டு ஒரு புதிய பாரம்பரியத்தை உருவாக்க முயலக் கூடாது எனத் தெரிவித்திருந்தது.
இது குறித்து ஹோலிக்கு அனுமதி கோரிய மாணவர்களில் ஒருவரான அகில் கவுசல் கூறும்போது, “துணைவேந்தரின் இல்லத்தில் ஈத் மிலன் விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு விடுதி மற்றும் கல்வித்துறையிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ரமலானுக்கான இப்தார் விருந்துகளை ஏற்பாடு செய்கிறார்கள். இதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. மத்தியப் பல்கலைகழகத்தில் இந்து மாணவர்கள் மட்டும் ஹோலி கொண்டாடக் கூடாதா? இத்தனைக்கும் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியிலுள்ள ஏஎம்யு அரங்கில்தான் கொண்டாட அனுமதி கேட்கிறோம்.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஏஎம் யுவில் ஹோலி கொண்டாட்டப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. கர்ணி சேனாவின் வருகையால் இந்த விஷயம் மேலும் சூடுபிடித்தது. இன்று சேனாவின் மாநிலத் தலைவர் தாக்கூர் ஞானேந்திர சிங் சவுகான் தலைமையில் ஏஎம்யு வாயிலின் முன் கூடி போராட்டம் நடத்தினர். ஹோலிக்கு அனுமதி அளிக்காவிட்டால் கர்ணி சேனாவினர் பல்கலைக்கழக வளாகத்தில் பலவந்தமாகப் புகுந்து கொண்டாட இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். இதனால், ஏஎம்யு வளாகத்தில் பதற்றமான சூழல் உருவாகத் துவங்கி உள்ளது.
இது குறித்து பாஜகவின் மாநிலங்களவை எம்பியான பிரிஜ்லால் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமான இந்த நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை பல்கலைக்கழகம் அல்ல. அது மகாராஜா மகேந்திர பிரதாப் சிங்கின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஹோலி கொண்டாட அனுமதிக்காதது துரதிர்ஷ்டவசமானது. இந்த விஷயத்தில் அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதில், அலிகர் பல்கலை. நிர்வாகம் விழா கொண்டாடப்படுவதைத் தடுக்க முடியாதபடி ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஏஎம்யு வளாகத்தில் கடந்த ஆண்டு, இந்து மாணவர்கள் ஹோலி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, முஸ்லிம் மாணவர்கள் அவர்களைத் துரத்திச் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சூழல்நிலையில் ஹோலிக்கு முன்பாக, வரும் மார்ச் 10-ம் தேதி, ‘ரங் பர்னே ஏகாதசி’ நாளில், அகில பாரதிய கர்ணி சேனாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கர்ணி சைனிக்குகள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று இந்து மாணவர்களுடன் ஹோலி விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.