சென்னை, அபிராமபுரத்தைச் சேர்ந்த இன்ஜினீயரான மூதாட்டி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை தொலை தொடர்பு அமைப்பான டிராய் அதிகாரி என அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் மூதாட்டியிடம், “உங்கள் வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக மும்பை போலீஸார் தகவல் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் லைனில் இருங்கள், உங்களிடம் மும்பை போலீஸார் அதிகாரி ஒருவர் பேசுவார்” எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகு மும்பை போலீஸ் அதிகாரி எனக் கூறி ஒருவர் மூதாட்டியிடம் பேசியுள்ளார். அவர், “உங்கள் பெயரில் வந்துள்ள பார்சலில் போதைப்பொருள், போலி பாஸ்போர்ட்கள், புலித்தோல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் மூலம் உங்கள் வங்கி கணக்குகளுக்கு கோடிகளில் பணம் வரவு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆர்.பி.ஐ அறிவுறுத்தலின்படி உங்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில் நீங்கள் விசாரணைக்காக மும்பை வர வேண்டும்” என அந்த போலீஸ் அதிகாரி கூறியிருக்கிறார். அவரிடம் மூதாட்டி, வயது மூப்பு காரணமாக மும்பை வர இயலாது. அதோடு நீங்கள் சொல்வதைப் போல நான் எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என கூறியிருக்கிறார். உடனே மும்பை போலீஸ் அதிகாரி, “உங்களை நாங்கள் தற்போது டிஜிட்டல் அரஸ்ட் செய்து வைத்திருக்கிறோம். நீங்கள் நான் சொல்கிறபடி கேட்டால், உங்களை விடுவிக்க வழிவகை செய்வேன்” என மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அதனால் மூதாட்டியும் அமைதியாகியிருக்கிறார்.
இதையடுத்து மூதாட்டியின் வங்கி கணக்கு விவரங்களை மும்பை போலீஸ் அதிகாரி கேட்டு தெரிந்திருக்கிறார். பின்னர், அவர், மூதாட்டியிடம், “உங்களின் வங்கி கணக்கில் கோடிகளில் பணம் உள்ளது. அதனால் அந்தப் பணத்தை நான் சொல்லும் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தால், அதை ஆய்வு செய்துவிட்டு திரும்ப உங்களின் வங்கி கணக்குகளிலேயே வரவு வைத்துவிடுவோம்” என கூறியிருக்கிறார். அதை உண்மையென நம்பிய மூதாட்டியும், மும்பை போலீஸ் அதிகாரி தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு தன்னுடைய வங்கியிலிருந்த 4.67 கோடி ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார். பணம் அனுப்பப்பட்டதும் மூதாட்டியிடம் பேசிய மும்பை போலீஸ் அதிகாரி, “உங்களின் பணத்தை ஆய்வு செய்து விட்டு திரும்ப அனுப்புகிறேன்” எனக் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

பணம் திரும்ப வந்துவிடும் என்ற நம்பிக்கையில் மூதாட்டியும் காத்திருந்தார். ஆனால் பணம் வரவில்லை. அதனால் தன்னைத் தொடர்பு கொண்ட போன் நம்பருக்கு மூதாட்டி டயல் செய்தார். அப்போது அந்த போன் நம்பர்கள் சுவிட்ச் ஆஃப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை மூதாட்டி உணர்ந்தார். பின்னர் அவர், கடந்த செப்டம்பர் 2024-ம் தேதி , சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், பணத்தை இழந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். மேலும் மூதாட்டி எந்த வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினார் என்ற விவரங்களை சேகரித்தனர். அப்போது சென்னை திருவல்லிக்கேணி, வில்லிவாக்கத்தில் உள்ள சிலரது வங்கி கணக்குகளுக்கு அந்தப் பணம் சென்றிருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, “மலேசியா முத்துராமன் என்பவர், வங்கி கணக்குகளை தொடங்கி கொடுத்தால் கமிஷன் தருவதாகத் தெரிவித்தார். அதன்படிதான் நாங்கள் எங்கள் பெயர்களில் வங்கி கணக்குகளை தொடங்கினோம். அந்த வங்கி கணக்குகளுக்கு வந்த பணத்தை மலேசியா முத்துராமனிடம் கொடுத்தால் அவர் கமிஷனாக பணம் கொடுப்பார். அதன்படிதான் எங்கள் வங்கி கணக்குகளுக்கு வந்தப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்து அவரிடம் கொடுத்தோம்” என ஒரே கோரஸாக கூறினார்கள்.

இதையடுத்து அவர்களை வைத்தே மலேசியா முத்துராமனை போலீஸார் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் மூதாட்டியிடம் மோசடி செய்து பணத்தை வாங்கிய அவர், அதை ஹவாலா மூலம் கிரிப்ட்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடி கும்பலிடமிருந்து 52 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதோடு மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள், லேப்டாப்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பறிமுதல் செய்த 52 லட்சம் ரூபாயை பணத்தை இழந்த மூதாட்டிக்கு சட்டப்படி கொடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மீதமுள்ள பணம் எங்கு இருக்கிறது என போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.