புதுடெல்லி: “மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தென்னிந்திய மாநிலங்களை பழிவாங்க பாஜக துடிக்கிறது” என்று தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று இன்று நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த பாஜக விரும்புகிறது. இந்த நடவடிக்கையால் வட மாநிலங்களுக்குதான் ஆதாயம். இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் என்பது இல்லை. அதனால், தொகுதி மறுசீரமைப்பு என்ற அஸ்திரத்தின் மூலம் தென் மாநிலங்களை பழிவாங்கத் துடிக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் வட மாநிலங்களுக்கு அதிக பலன் கிட்டும்.
மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது மத்திய அரசின் திட்டம். அதைத்தான் தென் மாநிலங்கள் செயல்படுத்தின. வேண்டுமானால் 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தால், தென் மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி என்ன என்பதை பார்க்க முடியும். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை பொறுத்தவரையில், விகிதாச்சார அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும்” என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழகத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து 6 மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக அல்லாத முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: தொகுதி மறுவரையறை: மார்ச் 22-ல் ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டம் – 6 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு