இளம்பெண் லவ்லின் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு தோழியின் வீட்டுக்குச் செல்ல ரயிலேறுகிறார். அந்தப் பயணத்தில், டிக்கெட் பரிசோதகராக வரும் யோகி பாபு, உறவின் முக்கியத்துவத்தைப் புரியவைக்க நான்கு கதைகளை அவரிடம் சொல்லத் தொடங்குகிறார். அதன் திரை வடிவமே இந்த `நிறம் மாறும் உலகில்’.
சாதி ஆணவக் கொலையிலிருந்து தப்பி ஓடும் காதல் ஜோடிகள் (ரிஷிகாந்த் – காவ்யா) மும்பை டான்களின் யுத்தத்துக்குக் கிடையே சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் முடிவு என்னவானது என்பது முதல் கதை. வயதான தம்பதியர் (பாரதிராஜா, வடிவுக்கரசி) அவர்களின் இரண்டு மகன்களால் கைவிடப்படுகின்றனர். இறுதி நாட்களை நெருங்கும் அவர்கள், இளமையில் (ஏகன் – கலையரசி) வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்களை நினைத்துப் பார்க்கிறார்கள். அவர்களின் முடிவு என்னவானது என்பது இரண்டாம் கதை.
ரியோவின் அம்மாவைக் காப்பாற்ற கேன்சர் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஒரு கொலை செய்தால் பணம் கிடைக்கும் என்று உள்ளூர் தாதா சொல்கிறார். அதை அவர் செய்கிறாரா, அம்மா காப்பாற்றப்பட்டாரா என்பது மூன்றாவது கதை. உறவுக்காக ஏங்கும் ஆதரவற்ற ஆட்டோ ஓட்டுநரான சாண்டிக்குக் காதல் கைகூடுகிறது. கூடவே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அம்மாவின் (துளசி) பாசமும் கிட்டுகிறது. இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும் என்றவுடன் சாண்டி என்ன முடிவெடுத்தார் என்பது நான்காம் கதை.
டிக்கெட் பரிசோதகராக வரும் யோகிபாபுவுக்கும், கதை கேட்கும் லவ்லினுக்கும் பெரிய வேலையில்லை என்றாலும், கொடுக்கப்பட்ட பணியைச் சுமாராகச் செய்திருக்கிறார்கள். காதலியைப் பாதுகாக்க கஷ்டப்படும் கையறுநிலையைச் சிறப்பாகக் கடத்தியிருக்கிறார் ரிஷிகாந்த். வாய் பேச முடியாத நபராக வரும் காவ்யா, சைகைகளில் உணர்வுபூர்வமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஒரு குயிக் கேமியோ என்றாலும் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஆடுகளம் நரேன். “என்னம்மா ஆச்சு உங்களுக்கு… நீங்க வேணும்மா எங்களுக்கு” என்று “அம்மா… அம்மா” என்பதாக லூப் மோடில் செயற்கைத்தனத்தைக் கொட்டியிருக்கிறார் நட்டி (எ) நடராஜ். முடியல பாஸ்! பாரதிராஜா, வடிவுக்கரசி என்ற இருபெரும் ஜாம்பவான்களை வைத்துக்கொண்டு, காட்சிகளையோ கதாபாத்திரத்தையோ வலுவாகக் கட்டமைக்காமல் வீணடித்திருக்கிறார்கள். பாரதிராஜாவின் நடிப்பும் ஆங்காங்கே மிகை நடிப்பாக மாறிப்போனது சோகம். ஏகன் – கலையரசி ஆகியோர் சிறிது நேரம் ஆறுதல் தருகிறார்கள்.
அடுத்து, கையறுநிலையில் இருப்பது ரியோ. அவரும் கஷ்டப்பட்டு அதைத் திரையில் பிரதிபலிக்க முயல்கிறார். ஆனால் ‘இவருக்குப் பதில் இவர்’ என்ற டிவி சீரியல் பாணியில் புகுந்து, ரியோவுக்குப் பதிலாக அதீத செயற்கைத்தனமான நடிப்ப அள்ளி வழங்கியிருக்கிறார் விக்னேஷ்காந்த். இறந்தவரே எழுந்துவந்து “நான் ரியோவுக்குதாண்டா அம்மா” என்று காண்டாகும் அளவுக்குச் செல்கிறது அவரது மிகை நடிப்பு. அடுத்து, சோகமாக இருக்கும் துளசி, தன் அழுத்தமான முகபாவனைகளால் கதாபாத்திரத்தின் வலியைத் தாங்கி நிற்கிறார். ஆனால், ஆட்டோ ஓட்டுநராக வரும் சாண்டி, அந்தக் கதாபாத்திரத்தை இன்னுமே சீரியஸாகக் கையாண்டிருக்கலாம். அதனாலேயே எமோஷனலாக அவர் படும் பாடுகளைச் சிக்கல்களாக நாம் எங்குமே உணரவில்லை.
ஆரம்பத்தில் தாதாக்களுக்கு வரும் பின்னணி இசையில் ‘நல்வரவு’ வாங்கும் இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகன், போகப் போக ரிப்பீட் மோடுக்குள் சென்றுவிட்ட உணர்வைத் தருகிறார். பாடல்கள் எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், ஏற்கெனவே சோதிக்கும் திரைக்கதையில் வேகத்தடைகளாக அவை வந்து போகின்றன. நிறம் மாறும் கதைகளில் தேர்ந்த கேமரா கோணங்கள், ஒளியுணர்வு ஆகியவற்றைக் கொடுத்து, தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறது மல்லிகா அர்ஜுன் – மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு கூட்டணி. நல்ல காட்சிகளின் வறட்சியினால், படத்தொகுப்பாளர் தமிழரசனின் கத்திரி பட்டிருக்கும் கஷ்டத்தை நம்மாலும் உணர முடிகிறது.
நான்கு கதைகளும் மனித உறவுகளின் சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள், தனிப்பட்ட போராட்டங்களைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், அதை ஆழமாக ஆராயாமல் மேலோட்டமாகப் பேசி, கழிவிரக்கத்தை மட்டுமே கேட்டிருக்கிறார் இயக்குநர் பிரிட்டோ ஜெ.பி. உணர்ச்சிபூர்வமாக இருக்க அரை டன் கிளிசரினைத் திரைக்கதையில் கொட்டியிருப்பவர்கள், அதற்கான பலனாக ஒரு சொட்டு கண்ணீரைக் கூட நம் கைக்குட்டைகள் கொண்டுவரவில்லை. நிஜ சம்பவத்தைக் கதையாகச் சொல்வதே திரைமொழியாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீரியல் பாணியிலான திரைமொழியே அதில் பரவியிருக்கிறது.
உதாரணத்துக்கு, முதல் கதையில் நட்டி கதை சொல்ல, நாயகி எந்த எதிர்ப்பும் காட்டாமல் மடியில் உட்காரவைத்துக் கதை கேட்கிறார். அதேபோல, அவரைக் கொல்ல சுரேஷ் மேனனின் கும்பல் அப்பாவி ரிஷிகாந்த்தை ஏன் வற்புறுத்த வேண்டும் என்பதும் விளங்கவில்லை. இறுதியில் சுரேஷ் மேனனே உள்ளே புகுந்து நட்டியைச் சுடுகிறார். இல்ல புரியல! மும்பைக்கு வாய் இருந்தால் அழும் என்ற வகையில், கமர்ஷியல் படங்களில் சொல்லப்படும் ‘மும்பைக்கா டான்’ என்கிற தர்க்கமற்ற கதைகளை, யதார்த்தம் பேச வேண்டிய இடத்தில் பயன்படுத்தியதெல்லாம் போங்காட்டமே! பாரதிராஜா – வடிவுக்கரசி கதை மூலம் என்ன சொல்ல விழைகிறார்கள் என்பது படக்குழுவுக்கே வெளிச்சம்! இப்படி ஒவ்வொரு கதையிலும் அடிஷனல் ஷீட் கேட்கும் அளவுக்கு லாஜிக் மீறல்களும், நிஜத்தின் எல்லை மீறப்படும் நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன.
மொத்தத்தில், நான்கு கதைகளில் ஒன்று கூட நம் மனதைக் கவராமல், நிலை தடுமாறும் உலகாக மாறியிருக்கிறது இந்த ‘நிறம் மாறும் உலகில்’.