நிலவின் துருவ பகுதியில் பல இடங்களில் பனிக்கட்டிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கல ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலவின் தென்துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கியது. இந்த இடத்துக்கு சிவ சக்தி முனை என பிரதமர் மோடி பெயரிட்டார். இந்த இடத்தில் வெப்ப நிலை பகல் நேரத்தில் 82 டிகிரி செல்சியஸ் வரையும், இரவு நேரத்தில் மைனஸ் 170 டிகிரி வரையும் நிலவுகிறது.
நிலவின் தென் துருவ பகுதியின் மேல்பரப்பில் இருந்து 10 செ.மீ ஆழம் வரை உள்ள பகுதியில் வெப்பநிலையை அளவிட ‘சேஸ்ட்’ (நிலவின் மேற்பரப்பு வெப்பஇயற்பியல் சோதனை) என்ற ஆய்வுக் கருவி விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டிருந்தது. இதில் 10 தனித்துவமான வெப்பநிலை சென்சார்கள் உள்ளன. இதன் தரவுகள் குறித்து அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் துர்கா பிரசாத் கரனம் கூறியதாவது:
நிலவின் துருவ பகுதிக்கு கீழே பல இடங்களில் பனிக்கட்டிகள் இருக்கலாம் என சந்திரயான்-3 விண்கல ஆய்வுகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. நிலவில் ஏற்படும் குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாறுபாடு காரணமாக ஏற்படும் பனிக்கட்டிகள் உருவாகலாம். இந்த பனிக்கட்டிகளை ஆய்வு செய்யும்போது, இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை அறிய முடியும்.
நிலவின் தென்துருவ பகுதியில், சூரிய ஒளிபடாத இடங்களில் குளிர்ந்த வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகள் உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன. நிலவின் மேற்பரப்பில் நிலவும் அதிக வெற்றிடம் காரணமாக, இங்கு பனிக்கட்டி தண்ணீராக மாற முடியாது, ஆனால் ஆவியாக மாற முடியும். அதனால் நிலவு உயிர்வாழக்கூடிய நிலைமைகளை கொண்டிருக்கவில்லை.
ஆனாலும், நிலவில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய பனிக்கட்டி முக்கிய ஆதாரமாக உள்ளது. நிலவில் நீண்ட காலம் இருப்பதற்கு, பனிக்கட்டியை பிரித்தெடுத்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்களையும், உத்திகளும் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு துர்கா பிரசாத் கரனம் கூறினார்.