புதுடெல்லி: பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் பெண்களுக்கான செழிப்பு திட்டத்துக்கு (Mahila Samridhi Yojana) டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடும் நோக்கில், டெல்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த முதல்வர் ரேகா குப்தா, “இன்று மகளிர் தினம். இன்று எங்கள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2500 வழங்குவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த டெல்லி பட்ஜெட்டில் ரூ.5100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு விரைவில் தொடங்கும். இதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக அளித்த தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,500 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சி, மாதம் ரூ. 2,100 வழங்கும் என உறுதி அளித்தது. டெல்லி தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள பாஜக, தனது தேர்தல் வாக்குறுதி தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “இத்திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான போர்டல் செயல்படுத்தப்படும். இதன்மூலம், பெண்கள் விண்ணப்பிக்க முடியும். இத்திட்டம் குறித்த அனைத்து தகவல்களும் அதில் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் அளவுகோல்கள் மற்றும் பிற விஷயங்களைத் தீர்மானிக்க கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட் மற்றும் பிரவேஷ் வர்மா ஆகிய 3 அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலை டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மார்ச் 8-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்று விமர்சித்திருந்தார்.