இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா என அழைக்கப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இயேசுவின் போதனைகளான அன்பு, சகோதரத்துவம், சமாதானம், தொண்டு போன்ற உயரிய பண்புகளை அனைவரும் பின்பற்றி வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: கிறிஸ்தவ சமுதாயம், மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுகிறது. முதியோர் இல்லங்கள், ஏழைகளுக்கு இலவசக் கல்வி, மருத்துவ உதவி, மாற்றுத் திறனாளிகளுக்கு புகலிடம் ஆகிய நற்பணிகளை செய்து வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டதும் பின்னர் உயிர்த்தெழுந்து வந்ததும் தனி மனிதரின் வாழ்க்கை அனுபவம் அல்ல; அது உலகுக்கே சொல்லப்பட்ட பாடம். எப்போதும் நன்மையையே செய்யுங்கள், இடையே சோதனைகள் வந்தாலும் நிறைவில் நன்மையே நடக்கும் என்று உலக மக்களுக்கு நற்செய்தி சொல்வதற்கான நிகழ்வுதான் ஈஸ்டர் திருநாள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகிறவர்களுக்கும் அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும் விடியலும், நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை மக்கள் மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.