புதுடெல்லி: குஜராத் கடல் பகுதியில் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த முகாம்களில் பயிற்சி பெறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாடம் புகட்டும் விதமாக, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம். அல்லது, ட்ரோன்கள் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை உறுதி செய்யும் விதமாக, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பல் தற்போது குஜராத் கடல் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து வியாழக்கிழமை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் பிரம்மோஸ், பராக் 8 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
இதுகுறித்து உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அதிநவீன ஏவுகணைகள் எங்களிடம் உள்ளன. இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் அனைத்து ஏவுகணைகளையும் எங்களால் இடைமறித்து அழிக்க முடியும். ஆனால் பிரம்மோஸ் ஏவுகணையை மட்டும் எங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும். பிரம்மோஸை எங்களால் இடைமறித்து அழிக்க முடியாது” என்று தெரிவித்தன.
இந்தச் சூழலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது பிரம்மோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில், இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி வெள்ளிக்கிழமை காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்கிறார். அங்கு ராணுவ மூத்த தளபதிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்திருக்கும் சூழலில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதியின் ஸ்ரீநகர் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ள பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஏப்.23) நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, குடியரசு தலைவர் மாளிகைக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவருக்கு விளக்கினர் என்பது கவனிக்கத்தக்கது.