பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏப்.30-ம் தேதி ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மங்களகரமான நாளான ஏப்.30-ம் தேதி புதன்கிழமை அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதை ஏற்று, கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்பட்டன.
கடந்த பிப். 10-ம் தேதி ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதுவரையில் இல்லாத அளவுக்கு அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்த 2025-26 நிதியாண்டில் ஒரேநாளில் அதைவிட அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று முன்தினம் ஏப்.30-ம் தேதி ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருநாள் வருவாய் வசூலில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.