மதுரை: கொடைக்கானலில் நடைபெறும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்யை காண வந்த ஏராளமான தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதையொட்டி விஜய்யை பார்க்க, காலை முதலே அவரது கட்சியினர், ரசிகர்கள் மதுரை விமான நிலைய பகுதியில் திரண்டனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். தடுப்பு வேலிகளை அமைத்து போலீஸார் அவர்களை தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் விமான நிலைய பகுதியில் தவெகவினர், ரசிகர்கள் கூடினர். அவர்கள் விமான நிலைய முன்பகுதிக்கு செல்ல முண்டியடித்தனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில், குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வெளியில் பெருங்குடி அம்பேத்கர் சிலை வரையிலும் சாலைகளில் விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர்.
பின்னர் மாலை 4 மணிக்கு விஜய் விமான நிலையத்துக்கு வருகை புரிந்தார். அவரை பார்க்க வெளியே காத்திருந்த தொண்டர்கள், ரசிகர்கள் விமான நிலைய முன் பகுதியை நோக்கி சென்றனர். தடுப்புகளை தள்ளி விட்டும், தடுப்பு வேலிகளை சேதப்படுத்தியும், சுவர்களில் ஏறி குதித்தும் உள்ளே புகுந்தனர். தடுக்க முயன்ற போலீஸாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த விஜய், திறந்த பிரசார வேனில் ஏறி தொண்டர்கள், ரசிகர்களை பார்த்து கையை அசைத்தும், கரங்களைக் கூப்பி வணக்கம் செலுத்தியும் உற்சாகப்படுத்தினர். அப்போது கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பூக்களை தூவியும், கோஷமிட்டும் விஜய்யை வரவேற்றனர். சிலர் பால் மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தங்கள் செல்போன்கள் மூலம் வீடியோ எடுத்தனர்.
உற்சாக மிகுதியால் தொண்டர் ஒருவர் வேனில் ஏறி அவருக்கு கை கொடுத்தார். விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி சந்திப்பு வரையிலும் சுமார் 1 கி.மீ., தூரத்திற்கு சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களைப் பார்த்து சையசைத்தபடி விஜய் சென்றார். இதன்பின், நாகமலைபுதுக்கோட்டை வழியாக கொடைக்கானலுக்கு காரில் சென்றார்.
விஜய்யின் வருகையொட்டி துணை ஆணையர் அனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் மதுரை வந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் திணறினர். விஜய்யின் வருகையையொட்டி விமான நிலையம், பெருங்குடி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.