புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்,” என்று கூறினார்.
கர்னாலை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான தேசிய ஒருங்கிணைந்த கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மன்றத்தால் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய ஒருவர், பயங்கரவாதிகள் அப்பாவி மக்களின் இரத்தத்தைச் சிந்தினாலும், இந்த இரத்த தான முகாம் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறினார். கர்னாலின் பாஜக எம்.எல்.ஏ ஜக்மோகன் ஆனந்தும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில், வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒருவாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருந்தார். தேனிலவுக்காக அவர்கள் சென்றிருந்த நிலையில், பயங்கரவாதிகள் வினய் நர்வாலை சுட்டுக்கொன்றனர்.