புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷியை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார் பெருமை மிக்க இந்திய கடற்படை குடும்ப உறுப்பினரும், கல்வியாளருமான லலிதா ராம்தாஸ். முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் குறிவைக்கப்படுவதற்கு எதிராக ஹிமான்ஷி பேசியது பேசுபொருளானது நிலையில், இந்தப் பாராட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருதபோது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சமீபத்தில் அவரது மனைவி ஹிமான்ஷி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷியை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார் லலிதா ராம்தாஸ். அதில், “ஊடகத்துக்கு நீங்கள் அளித்த பேட்டியை திரும்பத் திரும்ப பார்த்தேன். நீங்கள் பேசியதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடந்த 22-ஆம் தேதி பஹல்காமில் பல அப்பாவி ஆண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு, முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் மீதான வெறுப்பு அதிகரித்தது.
ஆனால், அதை நீங்கள் புரிந்துகொண்டு, உங்களின் உறுதித்தன்மையை வெளிப்படுத்தினீர்கள். நீங்கள்தான் நிஜமான ராணுவ வீரரின் மனைவி. அரசியலமைப்பு மற்றும் நமது மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு உண்மையாக இருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். லலிதா ராம்தாஸ் முதல் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ராம் தாஸ் கட்டாரியின் மகள் ஆவார். அவரது கணவர் முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.