கராச்சி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.
இதனால், அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியுள்ளது.
இதன்படி, பாகிஸ்தானில் பதிவு செய்த அனைத்து விமானங்கள், பாகிஸ்தானிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள், ராணுவ விமானங்கள் உள்பட குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களும் இந்திய வான்வெளியில் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறையானது, ஏப்ரல் 30-ந்தேதி முதல் மே 23-ந்தேதி வரை அமலில் இருக்கும் என இந்தியா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்றதொரு நடவடிக்கையை கடந்த 6 நாட்களுக்கு முன்பே பாகிஸ்தான் எடுத்திருந்தது.
இந்த சூழலில், மே மாதத்தில் பாகிஸ்தானில் கராச்சி மற்றும் லாகூர் வான்வெளியின் குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தினசரி மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.
இதன்படி, மே 1-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை, அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை தினமும் கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளி மூடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், வர்த்தக விமான போக்குவரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படாது என அந்நாட்டு விமான போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று, அடுத்த 24 முதல் 36 மணிநேரத்தில் ராணுவ நடவடிக்கையை தொடங்க இந்தியா தயாராகி வருகிறது என்பதற்கான நம்பத்தக்க சான்று உள்ளது என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.