மதுரை: மதுரை கிரானைட் மோசடி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் கிரானைட் மோசடி தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களான நாகராஜன், துரை தயாநிதி (முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன்) ஆகியோர் மீது கீழவளவு போலீஸார் கிரானைட் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கிரானைட் மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் தனி வழக்கு பதிவு செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன பங்குதாரரான மதுரையை சேர்ந்த நாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் மீது கிரானைட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எங்கள் மீது பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை மீது நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த வழக்கில் என்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதை ரத்து செய்து என் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் தனித்தனி உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீதிபதி பூர்ணிமா பிறப்பித்த உத்தரவில், “மதுரை மேலூர் கீழவளவு பகுதியில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க 20 ஆண்டுகள் குத்தகைக்கு கடந்த 2008-ம் ஆண்டில் அனுமதி பெற்று உள்ளது. அதன்படி அங்கு உள்ள நிலங்களை குத்தகைக்கு எடுத்து கிரானைட் குவாரிகளை செயல்படுத்தியுள்ளது. அந்த நிறுவனம் விதிகளை மீறி கற்களை வெட்டி எடுத்துள்ளதாக 2011-ம் ஆண்டில் புகார்கள் எழுந்துள்ளன.
அதன்பேரில் மதுரை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ததில் அந்த நிறுவனம் கற்களை வெட்டி எடுத்ததால் அரசுக்கு ரூ.5 கோடிய 48 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக முடிவு செய்து உள்ளார். அதன்பேரில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டு, சுரங்க ஊழலை தடுக்கும் பரிந்துரைகளுடன் அறிக்கை தாக்கல் செய்தார். இதேபோல கனிமவளத்துறை அதிகாரி மோகன்தாஸ் ஆய்வு செய்ததில், ஒலிம்பஸ் நிறுவனம் சட்டவிரோதமாக ரூ.256 கோடியே 44 லட்சம் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் மனுதாரர் உள்ளிட்டோாட் மீது வெடிபொருள் சட்டம், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டவிரோத நடவடிக்கை மூலம் பெற்ற பணத்தை வைத்து பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு தேவையான ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதை போல மனுதாரர் உள்ளிட்டடோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், “சக நீதிபதி பிறப்பித்த உத்தரவை நான் பரிசீலித்தேன். இந்த வழக்கில் அவர் எடுத்த முடிவை தவறானவை என ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால், பண மோசடி சட்டத்தின்கீழ் மனுதாரர் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் முறையாக பரிசீலித்ததாக தோன்றவில்லை. எனவே, மனுதாரர் மனு மீது விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த விவகாரம் குறித்து விசாரணை நீதிமன்றம் மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும்,” என்று இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.