தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டிங்கள் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசாணைகளில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இணைப்புக் கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் ஆய்வு செய்து அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியிருந்தார். அதன்படி, அதில் 7 மருத்துவமனைகள் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்துக்கு கீழும், 11 மருத்துவமனைகள் நகராட்சி ஆணையரகத்தின் கீழும் வருகின்றன.
அங்கு பொதுப்பணித்துறை மூலம் இணைப்புக் கட்டிடங்களை கட்டுவதற்கு ரூ.63 கோடி நிதி ஒதுக்கீடு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தலா ரூ.3.5 கோடியில் அப்பணிகள் அங்கு நடைபெறும். அதேபோல், 13 அரசு மருத்துவமனைகளுக்கு தலா ரூ.3.5 கோடியில் மொத்தம் ரூ.45.50 கோடியில் இணைப்புக் கட்டிடங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் ரூ.22.50 கோடியில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அத்தகைய ஒருங்கிணைந்த ஆய்வகங்களை அமைக்க ரூ.10.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.