வெயில் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

திருச்சி: வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கும், அருகில் உள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கும் நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாதி வாரி கணக்கெடுப்பு எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்று தெரிவிக்காமல், பொத்தாம்பொதுவாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிஹார் உட்பட 6 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் காலத்தில் இதுபோன்று பலவிதமான அறிவிப்புகளை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

எனினும், சாதி வாரி கணக்கெடுப்பை அறிவிப்புடன் நின்றுவிடாமல், முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் சாதி வாரி கணக்கெடுப்புக்கு என்றும் தயாராக உள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளோம். அந்நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைப்பது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்று, பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போதுதான் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் 3 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் உள்ளன. இது, குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும். இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தால் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.