புதுடெல்லி: தரையிலிருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைக்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பாகிஸ்தானின் இச்செயலை தேவையற்ற ஆத்திரமூட்டும் செயல் என்று இந்தியா கருதுகிறது.
ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைகளில் தினமும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடந்து வருகின்றன.
பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தம், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கைக் குறைப்பு, அட்டாரி எல்லை மூடல் போன்ற இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது பலத்தை காட்டும் விதமாக விமானப்படை வீரர்களுக்கு ஏவுகணைத் தாக்குதலுக்கான உத்தரவுகளை வெளியிட்டு வருகின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “தரையிலிருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைக்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இந்தச் செயல், பாகிஸ்தானின் தேவையற்ற ஆத்திரமூட்டும் செயல் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் விரோத பிரச்சாரத்தினை அதிகரிக்கும் என்று இந்தியா கருதும். பதற்றமான இந்தச் சூழலில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த ஏவுகணை சோதனை இந்தியாவுடனான பதற்றத்தை தீவிரப்படுத்தும் ஒரு முயற்சியே.” என்று தெரிவித்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு, ஏப்.23-ம் தேதி இரவு பாகிஸ்தான் விமானப்படைக்கு முதல் உத்தரவினைப் பிறப்பித்தது. என்றாலும் எந்தவொரு பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை நடந்ததாக தகவல் வெளியாகவில்லை. அதன்பின்பு ஏப்.26 -27 தேதிகளில் கராச்சி கடற்பகுதியில், பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அறிவிப்பு வெளியானது. ஆனாலும் துப்பாக்கிச்சூடு பயிற்சியும் நடக்கவில்லை.
பின்பு, மீண்டும் ஏப்.30 – மே 2-க்கு இடையே இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்துக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்த மூன்றாவது முயற்சியை பாகிஸ்தான் செய்தது ஆனாலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை.
ஜம்மு காஷ்மீர் எல்லைகளில் தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச்சூடு மற்றும் பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் வீராவேச பேச்சுகள் இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானால் முன்மொழியப்பட்டுள்ள இந்த தரையிலிருந்து தரைக்கு ஏவும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது.