வாஷிங்டன்: “தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு இருக்கிறது’’ என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று ஏற்கெனவே அறிவித்தார். மேலும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உட்பட அமெரிக்க நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள பலரும் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மீண்டும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்திருக்கிறது. இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 2 நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் மார்கோ ரூபியோ வலியுறுத்தி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் இந்தியா – பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருநாடுகளும் சமுக தீர்வை காண வேண்டும். எனினும், இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இவ்வாறு டாமி புரூஸ் கூறினார்.