கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள யு.பி.எஸ் அறையில் இருந்து முதலில் புகைவந்தது, அதைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல வார்டுகளில் இருந்து நோயளிகள் தப்பி ஓடினர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்குச் சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் வடகரா பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், வெஸ்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த கோபாலான், மேப்பாடியைச் சேர்ந்த நஸீரா, மேப்பயூர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன், அடையாளம் காணமுடியாத மற்றொரு நோயாளி உள்பட 5 பேர் மரணமடைந்தனர்.

சுமார் 200 நோயாளிகள் அந்த கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதில் சுமார் 30 நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு மருத்துவமனையில் 3 பேர் புகைமூட்டம் காரணமாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்திக் குற்றம்சாட்டினார்.
அதேசமயம் மருத்துவக்கல்லூரி முதல்வர் கூறுகையில், “இறந்தவர்களில் ஒருவர் ஏற்கெனவே விஷம் குடித்து சிகிச்சையில் இருந்தவர். ஒருவர் கேன்சர் பாதித்து சீரியஸ் நிலையில் வந்திருந்தார். மற்றொருவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்தது. மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் இறக்கவில்லை” என்றார்.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துற அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய பிளாக்கில் யு.பி.எஸ் அறையில் புகை ஏற்பட்ட சம்பவத்தைத் தொடரந்து எமெர்ஜென்சி பகுதியில் உள்ள அனைத்து நோயாளிகளும் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
மேல் மாடி கட்டிடங்களில் இருந்த நோயாளிகளும் அங்கிருந்து மாற்றப்பட்டனர். கட்டடங்களில் வேறு யாரும் இல்லை என்பது பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
எமர்ஜென்சி சேவை தேவைப்படும் நோயாளிகளுக்கு பீச் மருத்துவமனையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யு.பி.எஸ் அறையில் புகையை ஏற்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்” என்றார்.