MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டது. கடந்த 15 சீசன்களாக சிஎஸ்கே தக்கவைத்திருந்த அனைத்து சாதனைகளும், பெருமைகளும் இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக தவிடுபொடியாகி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்திருக்கிறது. சிஎஸ்கேவின் நிலை எந்தளவிற்கு மோசமாகியிருக்கிறது என இதை வைத்தே நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியும்.
இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு (CSK) மறைக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், அதிக விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கும் சீசன் என்றே சொல்லலாம். இளம் வீரர்கள் மீது நம்பிக்கை கொண்டு சிஎஸ்கே செயல்பட தொடங்கியிருப்பது ஒரு முக்கிய உதாரணம். பலரும் கூறலாம், சிஎஸ்கே இதற்கு முன்னரும் இதே போல் செய்திருக்கிறதே என்று… ஆனால், இந்த சீசன் இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்த முதலீடு செய்தே ஆக வேண்டும் என்பதை நிச்சயம் கற்றுக்கொடுத்திருக்கிறது.
MS Dhoni: தோனி ஓய்வை அறிவிக்க வேண்டும்… 3 காரணங்கள்
தற்போதைய அணியில் அடுத்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் இணையும்போது இன்னும் பலமாகலாம். ஜடேஜாவின் நம்பர் 4 ஸ்பாட் நிச்சயம் சிஎஸ்கேவுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. பிரேவிஸ், தூபே உடன் மற்றொரு ஃபினிஷரையும் சிஎஸ்கே கண்டடைய வேண்டிய நிலை உள்ளது. ஆம், அதாவது தோனிக்கு மாற்று வீரரை சிஎஸ்கே கண்டடைய வேண்டும். இந்த சூழலில், தோனி இந்த சீசனோடு ஓய்வை அறிவிப்பதே சிஎஸ்கேவுக்கு நல்லது எனலாம். தோனி ஓய்வு பெற வேண்டும் என்பதற்கு இந்த 3 காரணங்களை சொல்லலாம்.
MS Dhoni: தோனியின் ஃகேப்டன்ஸி பிரச்னை
இதை படித்த உடன் பலரும் ஷாக் ஆவார்கள் என்பது உண்மையே. ஆனால், இதில் உண்மையும் இருக்கிறது. தோனியின் ஃகேப்டன்ஸி சிஎஸ்கேவில் எந்தவொரு மாயாஜாலத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆர்சிபிக்கு எதிரான போட்டியின் தோல்விக்கு பிறகு, பழியை நான் எடுத்துக்கொள்கிறேன் என அவரது பேட்டிங் தவறை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார், தோனி.
ஆனால், நேற்று அவர் செய்த பெரிய தவறு பௌலிங் ரொட்டேஷனில்… அன்ஷூல் கம்போஜை மிடில் ஓவரில் ஒரு ஓவர் பயன்படுத்தியிருந்தால், நூர் அகமது 19வது ஓவரை கூட வீசியிருக்க முடியும். 19வது ஓவரில் கலீல் இரண்டு சிக்ஸரை கொடுத்த உடன் நிச்சயம், பழைய தோனியை போல் அவரிடம் சென்று பேசியிருக்க வேண்டும். ஆட்டத்தை சற்று பொறுமையாக கையாண்டிருந்தால் கடைசி ஓவர்களில் அவ்வளவு ரன்கள் போயிருக்காது.
இது ஒருபுறம் இருக்க இன்னும் அவர் அதே அணியோடுதான் செல்வேன் என்று அடம்பிடிக்கிறார். வன்ஷ் பேடிக்கு நேற்று வாய்ப்பு வந்ததாகவும், கடைசி நேர காயத்தால் நிலைமை மாறியதாக கூறப்பட்டாலும் வன்ஷ் பேடிக்கு முன்னரே வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்பதே நாம் சொல்ல வருவது. பதிரானாவின் மீது அவர் வைத்திருக்கும் ‘அதீத’ நம்பிக்கையும் ஒரு பிரச்னையே. பதிரானாவின் பீல்டிங்கும் மோசமானதாக இருக்கிறது. எல்லிஸ் நிச்சயம் வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும்.
MS Dhoni: தோனியின் காம்பினேஷன் பிரச்னை
தோனி இருப்பதால் இளம் இந்திய ஃபினிஷரை அந்த இடத்தில் எடுக்க முடியவில்லை. அதைவிட தோனி இருப்பதால்தான் மெகா ஏலத்தில் பில் சால்ட், கேஎல் ராகுல், இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு முழு மூச்சாக சிஎஸ்கேவால் செல்ல முடியவில்லை. அவர் வெளியேறும்பட்சத்தில் அந்த ஸ்பாட் நிச்சயம் இளம் வீரர்களுக்கோ அல்லது வெளிநாட்டு அதிரடி பேட்டருக்கோ வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் எனலாம். சிஎஸ்கேவின் தற்போதைய பிரச்னையும் தீரும்.
MS Dhoni: தோனியும் அவரின் சுழற்பந்துவீச்சு பிரச்னையும்…
நேற்றைய ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி மட்டுமின்றி, முந்தைய லீக் போட்டிகளில் தோனிக்காகவே சுழற்பந்துவீச்சாளரின் ஒரு ஓவரை கேப்டன் கடைசிவரை மிச்சம் வைக்கிறார்கள். நேற்று சுயாஷ், குர்னால்; ராஜஸ்தான் போட்டியில் தீக்ஷனா; டெல்லி போட்டியில் அக்சர்; மும்பை போட்டியில் சான்ட்னர்; பஞ்சாப் உடனான 2 போட்டிகளிலும் சஹால் என தோனிக்கும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் உள்ள சிக்கல் இந்த சீசன் முழுவதும் தொடர்ந்திருக்கிறது.
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த இடத்தில்தான் சொதப்பினார். அன்று ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் சிஎஸ்கே 2வது வெற்றியை கூட பெற்றிருக்க வாய்ப்பில்லை. அன்று ரிஷப் பண்ட் செய்த தவறை அடுத்து பெரிதாக யாருமே செய்யவில்லை என்பதுதான் முக்கியமான விஷயம். தோனியின் அதிரடி ஃபினிஷிங் இந்தாண்டு மிஸ் ஆவதற்கும் இதுதான் காரணம். எனவே, இந்த மூன்று காரணங்களை வைத்துதான் அவரை ஓய்வு பெற வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். ஆனால் அவர் நிச்சயம் அடுத்த சீசன் வரை விளையாடுவார் என்றும் நம்பப்படுகிறது.