வாகா எல்லை மூடல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் உலர் பழங்கள் வர்த்தகம் பாதிப்பு

புதுடெல்லி: அட்டாரி – வாகா எல்லை மூடல் ஆப்கானிஸ்தான் உலர் பழ வர்த்தகத்தை பாதித்துள்ளது. இதனால், இந்தியாவில் அதன் விலை 10 முதல் 25% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால், இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய அரசும் பாகிஸ்தானின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதில் ஒன்றாக, பஞ்சாபிலுள்ள அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த எல்லை வழியாகத்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அந்நாட்டின் உலர் பழங்கள் இறக்குமதி ஆகின்றன.

உலகிலேயே ஆப்கானிஸ்தானில் விளையும் உலர் பழங்களுக்கு பெரிய தேவை உள்ளது. உலர் பழங்கள் விற்பனை என்பது ஆப்கானிஸ்தானுக்கு ஒரு நல்ல பொருளாதாரப் பலனையும் அளிக்கிறது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலால், அட்டாரி – வாகா எல்லை வழியாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்தியாவுக்கான உலர் பழ வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடுகள் காரணமாக இந்தியாவில் உலர் பழங்கள் விலை 10 முதல் 25 சதவிகிதம் உயரும் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து ஆப்கானிஸ்தானின் உலர் பழச் சந்தை வியாபாரிகள் கூறுகையில், “இங்கு பல ஆண்டுகளாக போர் மற்றும் உள்நாட்டு மோதல்கள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான உலர் பழ தேவையின் மிகப்பெரிய ஆதாரமாக ஆப்கானிஸ்தான் உள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலுக்கு பின் அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டது. இதனால், ஆப்கானிஸ்தானின் காந்தஹாரிலிருந்து உலர் பழங்களை ஏற்றிச் செல்லும் எந்த லாரியும் அட்டாரிக்கு செல்லவில்லை.

தற்போது, பாகிஸ்தான் தரப்பில், வாகா எல்லையில் சுமார் 200 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் சிக்கியுள்ளன. மேலும், இந்தியாவின் அட்டாரி எல்லையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு 35 முதல் 40 டன் உலர் பழங்களை ஏற்றிச் செல்லும் சுமார் 100 லாரிகள் உள்ளன. இவை முக்கியமாக ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மற்றும் காபூலில் இருந்து வருகின்றன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பு அன்றாடம் சராசரியாக 15 முதல் 20 லாரிகள் அட்டாரிக்கு வந்தபடி இருந்தன. ஜூலை 15 முதல் தீபாவளி வரையிலான நாட்களில், இந்த எண்ணிக்கை 40 முதல் 60 லாரிகளாக உயர்கின்றன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் இழப்பு ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.” என தெரிவித்தனர்.

கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.400 வரை அதிகரிப்பு: கடந்த ஐந்து நாட்களில், உலர் பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.400 வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோடையில் அனைத்து உலர் பழங்களின் தேவை குறையும் என்பதால் இந்த நிலை. இதுவே, உலர் பழங்கள் அதிகம் பயனாகும் குளிர்காலமாக இருந்திருந்தால், இந்த விலை ஏற்றம் பலமடங்காக இருக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர். பெரும்பாலான உலர் பழங்கள், பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.