ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, தொழிலதிபர்களின் வீடுகள் உட்பட சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லா சான்றிதழ் மிக முக்கியமானது. இந்த சான்றிதழ் கிடைத்த பின்னர்தான், தொழில் நிறுவனங்கள் முறைப்படி இயங்க முடியும். இந்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக தற்போது ஓய்வு பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2021-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி பல கோடி ரொக்கம், நகை, சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். சென்னை சாலிகிராமம், காவேரி தெருவில் உள்ள பாண்டியன் வீட்டுக்கு நேற்று காலை 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை கோயம்பேடு ஜெயா நகர் 8-வது தெருவில் உள்ள எகோ கேர் இன்ஜினியரிங் லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குணசேகரன் என்பவரது வீட்டில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கே.கே.நகர் டாக்டர் ராமசாமி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மருத்துவர் வரதராஜன் வீடு, அசோக்நகரில் என்சிஎஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனி மாட தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.கே.நாதன் வீடு உள்பட சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.
ஓய்வு பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாண்டியன் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரொக்கம் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், இந்த சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அன்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள சதாம் உசேன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஓய்வு பெற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாண்டியன் தொடர்புடைய ஆய்வகத்தில் பணியாற்றி வருவதால் சதாம் உசேனின் வீட்டில் சுமார் 8 மணி நேரம் சோதனை நடத்தி உள்ளனர். சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதோடு சதாம் உசேனையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.