தமிழகத்தில் இன்று (மே 7) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். தென் மேற்குப் பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 13-ம் தேதி தொடங்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.