கீவ்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா பரிசீலித்து வருவதற்கான அறிகுறியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை வரவேற்றுள்ளார். இது ஒரு நேர்மறையான அறிகுறி என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் முழுமையான, நீடித்த மற்றும் நம்பகமான போர் நிறுத்தமே அமைதிக்கான முதல்படி என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள பதிவில், “இறுதியாக போரினை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ரஷ்யர்கள் பரிசீலிக்கத் தொடங்கியிருப்பது ஒரு நேர்மறையான அறிகுறியாகும். ஒட்டுமொத்த உலகமும் இதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருக்கிறது. போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உண்மையான முதல் படி, போர் நிறுத்தமேயாகும்.
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உயிர்களைக் கொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாளை, மே 12ம் தேதி முதல் முழுமையான, நீடித்த மற்றும் நம்பகமான போர்நிறுத்தத்தை ரஷ்யா உறுதி படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து நாடுகளில் இருந்து ஐரோப்பியத் தலைவர்கள் கீவ்க்குச் சென்று, மே 12ம் தேதி முதல் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இது நடந்துள்ளது. இந்தபோர் நிறுத்தம் நிலம், வான், கடல் பரப்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், குறைந்தது 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுத்தைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகத்தின் செய்திப்படி, அடுத்த வியாழக்கிழமை மே 15ம் தேதி, இஸ்தான்புல்லில் அவர்கள் முன்பு பேச்சுவார்த்தை நடத்திய இடத்தில் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க விரும்புகிறோம். பேச்சுவார்த்தை எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் நடத்தப்படவேண்டும்.
உக்ரைனுடன் நாங்கள் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அவை போரின் மூலக்காரணங்களை நீக்குவதாகவும், நீண்ட, நீடித்த அமைதியை நிறுவுவதை நோக்கமாக கொண்டது என்று புதின் தெரிவித்துள்ளார்.கடந்த 2022 பிப்,-ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றாவது ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மேலும் ஐரோப்பாவின் மிகவும் அழிவுகரமான போராக இது மாறியுள்ளது.