போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப்பின் ‘வர்த்தக அச்சுறுத்தல்’ காரணமா? – இந்தியா திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: ‘போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் வர்த்தகம் நிறுத்தப்படும்’ என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை, ட்ரம்ப்பின் வர்த்தக அச்சுறுத்தல் கூற்று உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அவற்றுக்கு பதிலளித்த ரந்திர் ஜெய்ஷ்வால், “ஜம்மு காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் பாகிஸ்தானுடன் இருதரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்கப்படும் என்பது இந்தியாவின் நீண்டகால கொள்கை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவது மட்டுமே நிலுவையில் உள்ள ஒரே பிரச்சினை.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் பகைமையை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ளாவிட்டால் வர்த்தகம் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினாரா என கேட்கிறீர்கள். அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தகம் குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அதிபர் ட்ரம்ப்பின் அறிக்கைகள் குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் டிஜிஎம்ஓ-தான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்தார். பாகிஸ்தான் தளங்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய திறன்மிகு தாக்குதல்கள் காரணமாக மட்டுமே போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் முன்மொழிந்தது. பஹல்காம் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற டி.ஆர்.எஃப்-க்கு தடை விதிக்க இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையை அணுகும்.

இந்தியாவின் தாக்குதல்கள் அனைத்தும் வழக்கமான இலக்குகள் மீது நடத்தப்பட்டவையே. அணு ஆயுதத் தளம் குறித்த ஊகங்களை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது. ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக பாகிஸ்தான், சீனா மற்றும் துருக்கியின் வான் பாதுகாப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தியதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்த தளவாடங்கள் எவ்வளவு ‘பயனுள்ளதாக’ இருந்தது என்பதை பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியுள்ளது” என தெரிவித்தார்.

பின்னணி என்ன? – இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியதை அடுத்தே மோதல் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதே இந்த சலசலப்புக்கு காரணம்.

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக முதலில் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று உரையாற்றுவதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சார்ந்து அமெரிக்க அரசு நிர்வாக ரீதியாக முக்கிய பங்காற்றியது. இரு தரப்புக்கும் வர்த்தக ரீதியான அழுத்தம் கொடுத்து இந்தப் போரை தவிர்க்கச் செய்தோம்.

இந்தப் போர் நிறுத்தம் நிரந்தரமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். சனிக்கிழமை அன்று இதை செய்தோம். இதன் மூலம் அணு ஆயுதங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே போரை தடுத்து நிறுத்தினோம். அது நடக்காமல் போயிருந்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இந்த மோசமான மோதலை அமெரிக்கா தவிர்க்கச் செய்துள்ளது. அதை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிக அளவில் வர்த்தகம் மேற்கொள்ள உள்ளோம். இது தொடர்பாக இந்தியாவுடன் பேசி வருகிறோம். விரைவில் பாகிஸ்தான் உடன் பேசுவோம்” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த கருத்து பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “பிரதமரின் மிகவும் தாமதமான உரை, சில நிமிடங்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் மாறாக உள்ளது. ட்ரம்ப் கூறியது பற்றி பிரதமர் முற்றிலும் அமைதியாக இருந்தார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கான ‘மத்தியஸ்தத்துக்கு’ இந்தியா ஒப்புக்கொண்டதா? ஆட்டோமொபைல்கள், விவசாயம் மற்றும் பிற துறைகளில் இந்திய சந்தைகளைத் திறப்பதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இந்தியா இப்போது அடிபணியுமா?” என்று தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்ததும் கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.