பிரஜின்-சாண்ட்ரா: ரசிகைகள் கொண்டாடிய ஆங்கர்; டிவியின் முதல் Cute Couple |இப்ப என்ன பண்றாங்க? பகுதி 9

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.

இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம்.

விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் இவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரஜின் - சாண்ட்ரா
பிரஜின் – சாண்ட்ரா

குவிந்த ரசிகைகள்.. இடம் மாறிய இதயங்கள்!

இன்றைக்கு சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் ரியல் வாழ்க்கையில் ஜோடி சேர்வது சகஜமாகி விட்டது. இப்படி இணைந்த ஏகப்பட்ட ஜோடிகளை நாம் பார்க்கலாம்.

ஆனால் தனியார் சாட்டிலைட் சேனல்களின் ஒளிபரப்பு தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களிலேயே டிவி மூலம் காதலித்து கரம்பிடித்து இந்தப் பாதைக்கு ரூட் போட்டுக் கொடுத்த ஜோடி என்றால் பிரஜின் சான்ட்ரா தம்பதியைச் சொல்லலாம்.

சன் டிவியில் தொகுப்பாளராக இருந்த பிரஜினிடம் பேசுவதற்கென்றே அவரது நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகைகள் அப்போது உண்டு.

‘இவருக்கு மட்டும் எப்படி  ரசிகைகள் குவியுறாங்க’ எனச் சக ஆங்கர்கள் இவரைப் பார்த்துப் பொறாமைப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

ஏகப்பட்ட ரசிகைகள் இருந்தும் ஸ்டேட் விட்டு ஸ்டேட் தாண்டி வந்த ஒரு ரசிகையிடம் மனதைப் பறிகொடுத்தார் பிரஜின்.

சினிமா போராட்டம்

அந்த ரசிகைதான் சாண்ட்ரா. பிரஜின் போலவே மலையாளச் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் சாண்ட்ரா. பிரஜினின் நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்டு அதைத் தொடர்ந்து கவனித்து, ஒரு ரசிகையாக அவரிடம் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் இருவரும் காதலர்களாகிப் பிறகு நிஜ வாழ்க்கையில் இணைந்தார்கள்.

திருமணத்துக்குப் பிறகு இருவருமே சினிமாவுக்கு முயற்சி செய்தனர். சின்னத்திரை அடையாளம் சினிமா முயற்சிக்குத் தடையாக இருக்குமென ஒரு கட்டத்தில் டிவியை முழுவதுமாக ஒதுக்கி வைத்து விட்டு சினிமா தேடலில் இறங்கினார் பிரஜின்.

இத்தனைக்கும் அந்தச் சமயத்தில் அவருக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் நிராகரித்தார்.

பிரஜின்
பிரஜின்

இருந்தும் சினிமா அவ்வளவு சுலபமாக இவரை ஏற்றுக் கொள்ளவில்லை. பத்துப் பதினைந்து படங்கள் நடித்தார். எந்தப் படமும் பெரிய வரவேற்பைத் தரவில்லை. எனினும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை 

“சினிமா முயற்சியில் வருடங்களை வீணாக்கிட்டதா எப்போவுமே நினைச்சதில்லை.

டிவியில இருந்து சினிமாவுக்குப் போறப்ப பலரும் சந்திச்ச, சந்திச்சுட்டு வர்ற பிரச்னைகளைத்தான் நானும் எதிர்கொண்டேன்.

ஒரு சிவகார்த்திகேயன், ஒரு சந்தானம் ஜெயிச்சிருக்கலாம். ஆனா நிறையப் பேர் போராடிட்டுதான் இருக்காங்க. நான் வொர்க் பண்ண படங்கள் நல்லபடியாகவே வெளியாகின.

`பழைய வண்ணாரப்பேட்டை’ படம் ஹிட் ஆகும்னு நம்பியிருந்தேன். ஆனா, அந்தப் படம் வெளியான மறுநாள் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா இறந்ததால, படம் வெளியே தெரியாமலேயே போயிடுச்சு.

இப்போவும் எதுவும் கடந்து போயிடல” எனத் தன் வேதனைகளைச் சாதாரணமாகக் கடந்து சென்றார்.

விடாது சினிமா

ஆனாலும் எத்தனை நாள் இப்படியே கடந்து செல்ல முடியும்? யதார்த்தம் வேறு மாதிரி அமைய, சில வருடங்களுக்கு முன் மீண்டும் ‘சின்னத் தம்பி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.

‘சரி, இனி தொடர்ந்து டிவியில் வருவாரோ என நினைத்த வேளையில், ‘இல்லை’ என்றபடி மீண்டும் சினிமா பக்கம் கவனம்  செலுத்தத் தொடங்கி விட்டார்.

இன்றைக்கும் இவர் ரெடி என்றால் சீரியலுக்குக் கூப்பிட பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் மீண்டும் மீண்டும் சினிமா ஏரியாவில் படையெடுத்து வருகிறார்.

பிரஜின், சாண்ட்ரா
பிரஜின், சாண்ட்ரா

தற்போது சில படங்கள் நடித்து வருகிறார். சில படங்கள் ரிலீஸுக்கு காத்திருப்பதாகச் சொல்கிறார்.

பிரஜின் குறித்த செய்திகளையாவது அவ்வப்போது அவர் நடித்த படங்கள் குறித்த அறிவிப்புகளின் மூலம் பார்க்க முடிகிறது. ஆனால் சாண்ட்ரா?

சாண்ட்ரா குறித்து பிரஜினிடமே கேட்டோம்.

சீக்ரெட் ஆஃப் சக்சஸ் ஃபேமிலி

”கல்யாணத்துக்கு முன்னாடி மட்டுமில்ல, கல்யாணத்துக்குப் பிறகுமே கூட அவங்களுக்கான சுதந்திரத்துல நான் தலையிட்டதே இல்லை.

அதனாலதான் வாழ்க்கை எந்தப் பிரச்னையுமில்லாம சுமூகமாப் போயிட்டிருக்கு. நடிக்க விருப்பமா நடிக்கட்டும், இல்லையா குடும்பத்தைக் கவனிக்கணும்னா கவனிக்கட்டும்னுதான் சொன்னேன்.

நடிகை வடிவுக்கரசி கூட ஒரு தடவை ‘நல்லா நடிக்கிற பொண்ணை வீட்டுக்குள் அடைச்சு வச்சிருக்கியே’னு எங்கிட்ட கோபிச்சுக்கிட்டாங்க. பிறகு அவங்களுக்குப் புரிய வச்சேன்.

எங்க திருமணத்துக்குப் பிறகு ‘தலையணைப் பூக்கள்’ சீரியல்ல நடிச்சாங்க. ஒருசில படங்கள்ல நடிச்சாங்க. ஏன் நாங்க ரெண்டு பேருமே கூட சேர்ந்து நடிச்சோம்.

பிரஜின் – சாண்ட்ரா

பிறகு எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தைகளைப் பார்த்துக்கவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்கு.

அதனால ‘குழந்தைகள் வளரட்டும், அதன்பிறகு பார்த்துக்கலாம்’னு அவங்கதான் சொல்லிட்டாங்க. ஒரு வகையில் அதுவுமே எனக்குச் சரின்னுதான் பட்டுச்சு.

அதனால இப்ப முழுக்க முழுக்க குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு அவங்களை நல்லபடியா வளர்த்து ஆளாக்கறதுல கவனமா இருக்காங்க.

நிறைய வாய்ப்புகள் அவங்களுக்குமே வந்துட்டுதான் இருக்கு. ஆனா சம்பாத்தியம் மட்டுமே முக்கியம்னு நினைக்காததால் அந்த வாய்ப்புகளைப் பொருட்படுத்தலை” என்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.