கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து ஆர்த்தியைப் பற்றி எழுந்த பேச்சுகளுக்கு ஆர்த்தி அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
தற்போது நடிகர் ரவி மோகனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “நான் எனது குடும்பத்தினரிடம், நெருங்கிய நண்பர்களிடம் மற்றும் என்னை உண்மையாக நேசிக்கும் ரசிகர்களிடம், விவாகரத்து கோருவதற்கு முடிவு செய்ததை ஏற்கெனவே பகிர்ந்திருந்தேன்.
இந்த முடிவை, எனது முன்னாள் மனைவி உள்பட அனைவரின் தனியுரிமையை பாதுகாக்கும் விருப்பத்துடன் எடுத்தேன். மேலும் இந்த விஷயத்தில் மக்கள் குற்றம் சாட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால், மௌனம் குற்றமாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
இப்போது, சமீபத்திய பொது தோற்றங்களின் அடிப்படையில், எனது குணத்தை மட்டுமல்ல, கேள்விக்குள்ளாக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளால் நான் பொது வெளியில் அவதூறு செய்யப்படுகிறேன். இந்த கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எப்போதும் செய்தது போல, கண்ணியத்துடன், உறுதியுடன் மற்றும் நீதியின் மீது நம்பிக்கையுடன் என் உண்மையில் நிற்பேன் எனக் குறிப்பிட்டிருக்கிறேன்.
என்னுடைய சூழ்நிலைகளை முழுமையாக அறிந்து, புரிந்து, நான் எனது முன்னாள் மனைவியுடனான திருமண வாழ்விலிருந்து விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் எனது குழந்தைகளை விட்டு நான் விலக மாட்டேன். எனது குழந்தைகள் எனது நிரந்தர பெருமையும் மகிழ்ச்சியும் ஆகும்.

என்னுடைய இரு மகன்களுக்காக எல்லாவற்றையும் செய்வேன். எனது குழந்தைகள் நிதி ஆதாயத்திற்காகவும், பொது அனுதாபத்தை கருவிகளாக பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது நான் உடைந்துப் போகிறேன். அதே சமயம் பிரிவுக்குப் பிறகு நான் வேண்டுமென்றே அவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறேன்.
இப்போது, எனது குழந்தைகளை நான் பார்க்கவோ அணுகவோ முடியாதபடி கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பவுன்சர்கள் அவர்களுடன் செல்கின்றனர். இதற்குப் பிறகும் நீங்கள் என்னை கேள்வி கேட்கிறீர்களா? எனது குழந்தைகள் ஒரு கார் விபத்தில் சிக்கியது ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மூன்றாம் தரப்பினர் மூலமாகவே எனக்கு தெரிய வந்தது.
காரை பழுதுபார்ப்பதற்கு காப்பீட்டிற்காக எனது கையொப்பம் தேவைப்பட்டபோது மட்டுமே எனக்கு அந்த விஷயம் தெரியவந்தது. இன்னும் அவர்களை சந்தித்து அவர்களின் நலனை அறிய அனுமதிக்கப்படவில்லை.

என்னுடைய குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்புகிறேன். ஆனாலும், எந்த தந்தையும் இதற்கு தகுதியானவர் இல்லை. நான் எனது முன்னாள் மனைவியையும் குடும்பத்தையும் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து நேசித்து ஆதரித்தேன். விரைவில் அவர்களின் உண்மை அறிந்து ஒரு ஆணாகவும் தந்தையாகவும் விலகுவதற்கு எனக்கு எவ்வளவு வலிமை தேவைப்பட்டது என்பதை புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.” என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.