மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாநிலத்திலேயே முதல் முயற்சியாக விபத்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காய தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் நிலைமை குறித்து பயம், பதற்றத்துடன் இருக்கும் உறவினர்களுக்கு முழுமையாக விளக்கும் வகையில் ‘துயர்நிலை ஆலோசர்’ உதவி மையம் நாளை (மே 22) துவக்கப்படுகிறது.
விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிர் காக்கும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சி்கிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கிற்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுவர். அப்போது உறவினர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் நோயாளிகளின் நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள முடியாமல் உறவினர்கள் பதற்றத்துடன் இருப்பர்.
அவர்களுக்கு மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை மற்றும் நோயாளிகளின் நிலைமையை விளக்கிக் கூறி ஆறுதல் கூற மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாநிலத்திலேயே முதல் முயற்சியாக விபத்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காய தீவிர சிகிச்சை பிரிவில் ‘துயர்நிலை ஆலோசகர்’ (Grief counselor) உதவி மையம் நாளை (மே 22) தொடங்கப்படுகிறது. ‘டீன்’ அருள் சுந்தரேஷ்குமார் இம்மையத்தை தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சை மற்றும் தலைக்காய சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் கூறியதாவது: “தலைக்காயம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருகிறவர்கள் உயிருக்கு போராடும் நிலையிலேயே கொண்டு வரப்படுகிறார்கள். மருத்துவர்கள், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். நோயாளியின் நிலை குறித்து விளக்க நேரம் இருக்காது.
இந்த நோயாளிக்கு சிகிச்சை வழங்கிவிட்டு, அடுத்தடுத்து காயமடைந்தோருக்கு சிகிச்சை வழங்க சென்று விடுவார்கள். ஆனால், காயமடைந்தவர்களை பார்க்கவும், அவர்களின் நிலையைத் தெரிந்து கொள்வதற்கும் தொடர்ந்து தலைக்காயம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உறவினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் அச்சத்தை போக்கிடவும், பதற்றத்தை தணிக்கவும் 20 ஆண்டுகள் செவிலியர் அனுபவம் பெற்ற சேவை மனப்பான்மை கொண்ட செவிலியர்கள், ‘துயர் நிலை ஆலோசகர்’ (Grief counselor) உதவி மையத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மாநிலத்திலே முதல் முயற்சியாக இங்கு இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது. பரிசோதனை முயற்சியாக கடந்த ஒரு மாதமாக, இவர்கள் இந்த பணியை செய்து வந்தார்கள். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்ததால், இந்த துயர்நிலை ஆலோசகர் மையம் நாளை முறைப்படி தொடங்கி வைக்கப்படுகிறது. மருத்துவர்கள் ஆலோசனையுடன் நோயாளிகளின் நிலை குறித்த தகவல்களை மட்டுமே இந்த செவிலியர்கள் உறவினர்களிடம் தெரிவிப்பர். இந்த செவிலியர்களுக்கான ஊதியத்தை மதுரை டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான ‘ஆரோக்கியா வெல்பர் டிரஸ்ட்’ வழங்கும்,” என்று அவர்கள் கூறினர்.