மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் முகேஷ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 181 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் சமீர் ரிஸ்வி 39 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
8-வது வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது மற்றும் கடைசி அணியாக அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறியது.
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், “நான் எப்போது வேண்டுமானாலும் அவர்களிடம் (சாண்ட்னர் மற்றும் பும்ரா) பந்தை கொடுக்க முடியும். அவர்கள் போட்டியில் அத்தகைய கட்டுப்பாட்டையும் முழுமையையும் கொண்டு வருகிறார்கள். இது எனது வேலையை மிகவும் எளிதாக்குகிறது.
நாங்கள் இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் எடுத்திருந்தாலே மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் நமன் மற்றும் சூர்யா அதிரடியாக விளையாடி முடித்த விதம் சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக நமன் திர் மிகச்சிறப்பாக விளையாடி கடினமான ஆடுகளத்திலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று கூறினார்.