“குடும்பத்துடன் இருப்பது போன்ற…” – டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த ஸ்டாலின் நெகிழ்ச்சி

டெல்லி: “சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திப்பது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. டெல்லியில் அவர்களது இல்லத்தில் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் ஒரு சிறப்பான அரவணைப்பு கிடைக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 23) புதுடெல்லி சென்றடைந்தார். பின்னர், காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியையும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, புதுடெல்லி, சாணக்யபுரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுடெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தின் பழைய கட்டடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழக முதல்வர் 26.7.2024 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து அங்கு கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இப்புதிய கட்டடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்புத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கி, 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொண்ட பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டு, புதுடெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி டாக்டர் பரமேஸ்வரனை தமிழக முதல்வர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

இந்த நிகழ்வுகளின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் இருப்பது போன்ற… – சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சோனியா காந்தி மற்றும் அன்பு சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திப்பது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. டெல்லியில் இவர்களை ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் ஒரு சிறப்பான அரவணைப்பு கிடைக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.