ஸ்வீடனிலுள்ள ஹெல்சிங்போர்க்கை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர், தனது மகளுடன் இணைந்து ஆப்பிள் கேக் செய்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவால் மன உளைச்சலுக்கு உள்ளான பார்வையாளர் ஒருவர், உள்ளூர் அதிகாரிகளிடத்தில் இது குறித்து புகாரளித்தார். புகாரை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் தாய்க்கு ரூ. 1.7 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், ‘ஒரு குழந்தையிடத்தில் இத்தகைய செயல்பாட்டை செய்யக்கூடாது’ எனவும் நீதிமன்றம் கண்டித்தும் இருக்கிறது.
அப்படி என்ன நடந்தது?
2023 ஆம் ஆண்டு, சம்பவம் நடந்தபோது, தாய் தன் மகளுடன் இணைந்து ஆப்பிள் கேக் செய்வோம் என கூறி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். வீடியோ படப்பிடிப்பின் போது, எதிர்பாராத விதமாக திடீரென குழந்தையின் நெற்றியில் தட்டி முட்டையை உடைத்து பிராங்க் செய்தார் தாய். அதனால் குழந்தையின் முகத்தில் மஞ்சள் கரு சொட்டியது.

சிறுமியின் அசௌகரியம் மற்றும் ஆச்சரியத்தை படம்பிடித்து பதிவிட்ட தாயின் டிக்டாக் வீடியோ, சுமார் 1,00,000-க்கும் மேலான பார்வைகளைப் பெற்று வைரலானது. பெற்றோர்கள் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைப்பது போல நடித்து, திடீரென அதை தங்கள் குழந்தையின் தலையில் உடைப்பது ஆன்லைன் ட்ரெண்டின் அங்கமாக இருந்த வேளையில், இச்சிறுமியின் தாயும் இந்த பிராங்க்கை தனது மகளுடன் செய்து அதை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார்.
சிக்கலில் முடிந்த பிராங்க்!
பிராங்க் வீடியோ பார்வைகளை குவித்தாலும், தாயின் இத்தகைய செயல்பாட்டால் குழந்தைகளின் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் நெட்டிசன்களிடத்தில் பேசுபொருளாகி வீடியோவில் விமர்சனங்களும் குவிந்தது. இந்த பிராங்க் வீடியோவால் மன உளைச்சலுக்கு உள்ளான பார்வையாளர் ஒருவர் தெரிவித்த புகாரை நீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையில் பேசிய வழக்கறிஞர் சிசிலியா ஆண்டர்சன், “தாயோடு நாம் ஆப்பிள் கேக் செய்ய போகிறோம் என அளவற்ற ஆனந்தத்தோடு காத்திருக்கும் குழந்தையின் நெற்றியில் திடீரென முட்டை உடைத்து ஊற்றி தாய் பிராங்க் செய்தால் குழந்தையின் மனம் இந்த அனுபவத்தால் எவ்வளவு பாதிப்பை சந்திக்கும்? தாய்-மகளின் உறவு பிணைப்பு நேரம், பிராங்க் செய்வதற்கான நேரமல்ல. இது தாயின் பொறுப்பற்ற செயல்” என வாதங்களை முன்வைத்தார்.

நீதிமன்றத்தின் விசாரணைக்கு பதிலளித்த சிறுமியின் தாய், “எல்லோரும் வைரல் ட்ரெண்டை செய்தார்கள் என நானும் அதில் பங்கேற்றேன். என் குழந்தைக்கு எந்தத் தீங்கும் செய்ய நினைக்கவில்லை. என் மகளின் மனதில் இந்த பிராங்க் வீடியோ பாதிப்பை ஏற்படுத்தும் என நான் உணரவில்லை” என பதிலளித்தார். தாயின் பதிலை ஏற்காத நீதிமன்றம், பிராங்க் செய்து குழந்தையைப் பொதுவெளியில் சங்கடப்படுத்தியதற்காக அபராதம் விதித்து உத்தரவிட்டது.