கொல்கத்தா: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள தூதுக் குழுக்கள் நாடு திரும்பியதும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானஜி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு பிரதிநிதிகள் குழுக்கள் சென்றிருப்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் தொடர்ந்து கூறிவருவது போல, தேசத்தின் நலனுக்காகவும், நமது இறையாண்மையை காக்கவும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி துணைநிற்கும்.
இந்த மாபெரும் தேசத்தின் மக்கள் சமீபத்திய மோதல்கள் மற்றும் சமீபத்தில் வளர்ந்து வரும் முன்னேற்றங்கள் குறித்து வேறு எவருக்கும் முன்பாக தெரிந்து கொள்வதற்கு முதன்மையான உரிமையுள்ளவர்கள். இதனை நான் தீவிரமாக நம்புவதால், வெளிநாடு சென்றிருக்கும் பிரதிநிதிகள் குழுக்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியதும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.