‘அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது’ – ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு

பெர்லின்: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 23) ஜெர்மனியின் பெர்லினில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுலுடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய ஜெய்சங்கர், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த உடனேயே நான் பெர்லினுக்கு வந்தேன். அந்த சூழலில் வடேபுலுக்கு நான் தெரிவித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது.

மேலும், பாகிஸ்தானை இந்தியா முற்றிலும் இருநாட்டு நல்லுறவைப் பேணும் வகையிலேயே கையாளும். அந்த விஷயத்தில் எந்தத் துறையிலும் எந்த குழப்பமும் இருக்கக்கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு நாட்டுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்ற ஜெர்மனியின் புரிதலை இந்தியா மதிக்கிறது” என்று கூறினார்.

வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் வடேபுல் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலைப் பகிரங்கமாகக் கண்டித்து, பயங்கரவாதத்துக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பெர்லினில் வெளியுறவு அமைச்சர் வடேபுல் உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையை ஜெர்மனி புரிந்துகொண்டதற்கு ஆழ்ந்த பாராட்டுகள்.

இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை வலுவாக்கவும், ஆழமாகவும், நெருக்கமாகவும் மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. உலகளாவிய கவலைகள் மற்றும் சவால்கள், பிரச்சினைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்தியாவில் அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.