திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் வேற்றுமத ஊழியர்கள் 29 பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்தார்.
திருமலையில் ‘டயல் யுவர் இஓ’ எனும் நிகழ்ச்சியில் 35 பக்தர்களிடம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் நேற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் திருமலையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. வாட்ஸ்-அப் சேவை, ஸ்கேன் மூலம் உண்டியல் காணிக்கை செலுத்துதல் என பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். அன்னதானம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
திருமலையில் 18 இடங்களில் ’திருநாமம்’ இடுதல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. திருமலையில் 42 தனியார் விடுதிகளின் பெயர்கள் சிறந்த ஆன்மீக பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. திருமலையில் தற்போதுள்ள 68 சதவீத பசுமையை 80 சதவீதமாக உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த வேற்றுமத ஊழியர்கள் 29 பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சியாமள ராவ் கூறினார்.