‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். இன்றைய தினம் சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவை நடத்தி வருகின்றனர். படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

சிம்பு பேசுகையில், “நாசர் சார்கூட பல படங்கள் நடிச்சிருக்கேன். இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல். அபிராமி மேமோட நடிப்பு இந்தப் படத்துல கண்டிப்பாக பேசப்படும். அசோக் செல்வன் என் தம்பி மாதிரி. அவருக்கு திறமை இருக்கு. இன்னும் பெரிய இடத்துக்கு வருவாரு. த்ரிஷாவும் நானும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா ‘ பண்ணியிருந்தோம். நாங்க சேர்ந்து நடிக்கிறதைப் பற்றி பலரும் எதிர்பார்த்தாங்க. டிரெய்லர் வந்ததும் பலரும் ஷாக் ஆகிட்டாங்க. அவங்க சொன்ன மாதிரி இன்னும் பல சர்ப்ரைஸ் இருக்கு. ரஹ்மான் சாரை சின்ன வயசுல இருந்து தொந்தரவு பண்ணியிருக்கேன். இப்போதும் பண்ணீட்டு இருக்கேன்.
பீப் சாங் வந்தபோது எனக்கு கஷ்டமான நேரம். அப்போ எனக்காக அவர் பண்ணினதுதான் ‘தள்ளிப் போகாதே’ பாடல். என்னுடைய அப்பா படத்துல இருந்து வெளில வந்து எனக்கு பாடுறதுக்கு வாய்ப்புக் கொடுத்தது ரஹ்மான் சார்தான். மணி சார் ‘அஞ்சலி’னு ஒரு படம் எடுத்தாரு. அந்தப் படம் பார்த்துட்டு நான் அழுக ஆரம்பிச்சுட்டேன். ‘நானும் இதே வயசுதானே ஏன் மணி சார் என்னை நடிக்கக் கூப்பிடல’னு சொன்னேன். அப்போ நான் இவர் நம்மைக் கூப்பிடவே மாட்டார்னு நினைச்சேன்.

உண்மையாகவே நீங்கதான்..!
ஏன்னா, நான் வளர்ந்து நடிச்சது எல்லாமே மாஸ், மசாலா படங்கள்தான். அப்படியான நேரத்துல எனக்கு ரெட் கார்ட் கொடுக்கிற மாதிரியான சூழல் வந்தது. அந்த நேரத்துல என்ன வச்சு படம் பண்றதுக்கு பயந்தாங்க. அந்த நேரத்துல எனக்கு படம் இல்ல. இயக்குநர் யாரும் என்கிட்ட வரல. அப்போ மணி சார் ஆபிஸ்ல இருந்து கால் வந்தது. அப்போ அவர்கிட்ட ‘உண்மையாகவே நீங்கதான் என்னைக் கூப்பிட்டீங்களா’னு கேட்டேன்.
அவர் ‘ நான்தான் கூப்பிட்டேன்’னு சொன்னாரு. என்னை வச்சு படம் பண்றதுக்கு நம்பிக்கையாகக் கூப்பிட்டீங்க. ரொம்பவே நன்றி சார். ‘செக்கச் சிவந்த வானம்’ படம் மட்டும் கிடையாது. இன்னும் சில படங்களுக்கும் கூப்பிட்டு எனக்கு கதை சொல்லியிருக்காரு. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கும் என்னைக் கூப்பிட்டாரு. அப்போ சில காரணங்களால பண்ண முடியல.

கமல் சார் பத்தி பேசிட்டே இருக்கலாம்
‘தக் லைஃப்’ படத்துக்கு முதல்ல கூப்பிட்டப்போ கெட்டப்னால என்னால பண்ண முடியல. மறும்படியும் அந்த வாய்ப்பு கமல் சாரோட அமைந்தது. கமல் சார் பத்தி நிறைய விஷயங்கள் பேசிட்டே இருக்கலாம். கமல் சார் நான் இன்னும் சினிமாவின் மாணவன்னு சொல்றாரு. திறமையான மாணவன்கிட்ட கத்துக்கிறதுல எனக்கு பிரச்னையே இல்ல.” என்றார்.