England vs India 1st Test: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் (ENG vs IND) மோதுகின்றன. ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) என இத்தொடருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்டது.
ENG vs IND 1st Test: இங்கிலாந்து – இந்தியா போட்டியை பார்ப்பது எப்படி?
ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை 2025 இன்று (ஜூன் 20) முதல் தொடங்குகிறது. முதல் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் (England vs India Headingley Test) நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும். முதல் செஷன் மதியம் 3.30 மணி – மாலை 5.30 மணி. இரண்டாவது செஷன் மாலை 6.10 மணி – இரவு 8.10 மணி. தொடர்ந்து, மூன்றாவது செஷன் இரவு 8.30 மணி – இரவு 10.30 மணி.
குறைவான ஓவர்கள் வீசப்பட்டால் மூன்றாவது செஷன் நீட்டிக்கப்படலாம். இத்தொடரை தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்க விரும்புவோர் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வார்க் சேனல்களில் கண்டுகளிக்கலாம். டிடி சேனலில் இலவசமாகவும் பார்க்கலாம். ஓடிடி தளத்தில் பார்க்க விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
ENG vs IND 1st Test: இளம் இந்திய அணி…
சுப்மான் கில் (Shubman Gill) தலைமையில் இளம் இந்திய அணிக்கு (Team India) தற்போது பல்வேறு சவால்கள் உள்ளன. இந்திய அணியில் பேட்டிங்கை ஒப்பிடும்போது வேகப்பந்துவீச்சு ஓரளவு அனுபவம் பெற்றிருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளை விளையாடியது. அதில் 3வது டெஸ்டில் இந்தியா ஹெடிங்லி மைதானத்திலேயே விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்த கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் மட்டுமே தற்போது உள்ளனர். மற்ற அனைவருமே புதிய வீரர்கள் எனலாம்.
ENG vs IND 1st Test: இங்கிலாந்து பந்துவீச்சில் குறைவான அனுபவம்
இங்கிலாந்து அணியும் (Team England) மொத்தமாக மாறியுள்ளது எனலாம். கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஹெடிங்லி போட்டியில் இங்கிலாந்தின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்த ஜோ ரூட் மட்டுமே இன்றைய போட்டியில் விளையாடிகிறார். மற்ற 10 வீரர்களும் கடந்த முறை இல்லை எனலாம். அப்போது ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாகவும் இருந்தார். தற்போது உள்ள இங்கிலாந்து அணியில் பேட்டிங் வலுவாக உள்ளது. இந்த பேட்டிங் ஆர்டர் அவர்களுக்கு பெரியளவுக்கு கடந்த 2 ஆண்டுகளில் உதவியிருக்கிறது, குறிப்பாக இங்கிலாந்து மண்ணில்… ஆனால், அவர்களுக்கு பந்துவீச்சு மட்டுமே அனுபவம் குறைவாக காணப்படுகிறது.
ENG vs IND 1st Test: இங்கிலாந்தின் பிளேயிங் லெவன்
இந்த சூழலில், இன்றைய டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி (Team England Playing XI) நேற்று முன்தினமே (ஜூன் 18) அறிவித்துவிட்டது. பென் டக்கெட், ஜாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜாஷ் டங், ஷோயப் பஷீர் உள்ளிட்ட 11 வீரர்களே இன்று விளையாட உள்ளனர். இதில் இந்திய அணிக்கு அதிக சிரமத்தை கொடுக்கப்போகும் அந்த 3 வீரர்கள் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
ENG vs IND 1st Test: கிறிஸ் வோக்ஸ்
கடந்தாண்டு டிசம்பரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் கடைசியாக கிறிஸ் வோக்ஸ் (Chris Woakes) விளையாடியிருந்தார். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து நீண்ட ஓய்வுக்கு பின் வருகிறார். தற்போதுள்ள வேகப்பந்துவீச்சு படையில் இவர்தான் சீனியர். புதிய பந்தில் இவரது அனுபவமும், ஸ்விங் பந்துவீச்சும் இந்தியாவின் டாப் ஆர்டருக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும். சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இருந்த கிறிஸ் வோக்ஸ் இந்திய A அணிக்கு எதிராக விளைாடியபோது இரண்டு இன்னிங்ஸ்களை சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயரை ஆட்டமிழக்கச் செய்த வோக்ஸ், 2வது இன்னிங்ஸில் மீண்டும் அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவர் இங்கிலாந்து அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 181 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். தொடர் நிறைவடையும்போது இவர் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிபிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ENG vs IND 1st Test: பென் டக்கெட்
பென் டக்கெட் (Ben Duckett) ரெட் பால் போட்டிகளையும், வொயிட் பால் போட்டிகளை போன்று விளையாடக் கூடியவர். இங்கிலாந்தின் இடது கை சேவாக் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்தின் Bazball அணுகுமுறையில் முக்கிய ஆயுதமே இவர்தான். இவர் ஜாக் கிராலியுடன் சேர்ந்து அதிரடி தொடக்கத்தை அமைத்துக்கொடுக்க வழிவகை செய்வார். முதல் ஓவரின் முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளை அடிக்க துடிப்பார்.
இவரின் விக்கெட்டை எடுப்பது அவ்வளவு எளிதில்லை. பும்ரா, சிராஜ் ஜோடி இவருக்கு தனி பிளானை வைத்திருக்காவிட்டால் கஷ்டம்தான். இவர் செட்டிலாகிவிட்டால் பெரிய ஸ்கோருக்கும் சென்றுவிடுவார். இவர் 33 டெஸ்ட்களில் 2410 ரன்களை அடித்துள்ளார். அதுவும் இங்கிலாந்து மண்ணில் 13 போட்டிகளில் 1007 ரன்களை அடித்திருக்கிறார், இங்கு அவரின் சராசரி 47.95 ஆக உள்ளது. இங்கிலாந்து மண்ணில் இவர் 2 சதங்கள், 5 அரைசதங்களை அடித்திருக்கிறார்.
ENG vs IND 1st Test: ஒல்லி போப்
மூன்றாவது வீரர் பெரும்பாலும் ஜோ ரூட்டை (Joe Root) தான் எதிர்பார்த்திருப்பீர்கள். ரூட் முரட்டு பார்மில் இருக்கிறார். கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, 9 இன்னிங்ஸ்களில் 737 ரன்களை குவித்தார், சராசரி 105.28. இப்போது தொடர்ந்து சதங்களை குவித்து வருகிறார். ஆனாலும், ஜோ ரூட்டை விட ஒல்லி போப் (Ollie Pope) தற்போது இந்திய அணிக்கு ஆபத்தானவராக இருப்பார். அனைவரும் ரூட்டின் விக்கெட்டை எடுக்க தீவிரம் காட்டும் நேரத்தில் இவர் செட்டிலாகி ரன்களை ஏற்ற தொடங்கிவிடுவார்.
மிகவும் நேர்த்தியான ஷாட்களை விளையாடக்கூடியவர். நம்பர் 3இல் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) இவரை நம்பி அணியில் எடுத்திருக்கிறார். இவர் 56 டெஸ்ட் போட்டிகளில் 3301 ரன்களை அடித்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் 28 போட்டிகளில் 1788 ரன்களை அடித்திருக்கிறார், சராசரி 40.63. மேலும் 5 சதங்கள், 8 அரைசதங்கள் இதில் அடக்கம். நிச்சயம் பந்து தேய்மானம் அடைந்து ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகும்போது இவரது அசுரத்தனமான ஆட்டத்தை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. எனவே இந்திய அணி பந்துவீச்சாளர்கள் இவரையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.