சிவகாசி: “தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. விஜய் நிலைப்பாட்டில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசி தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ‘தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்’ பேரணி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆட்சிக்கு வந்து 50 மாதங்களை கடந்த பின், தேர்தல் வருவதால் ஓரணியில் தமிழ்நாடு எனக்கூறி மக்களை குழப்ப பார்க்கின்றனர். தமிழ்நாடு மக்கள் வருமானம் இன்று தவித்து வரும் நிலையில் ஸ்டாலின் குடும்பம் தான் ஓரணியில் சுபிட்சமாக உள்ளது.
தெற்கு, வடக்கு எனப் பேசுவது, மொழிப் பிரச்சினையை தூண்டிவிடுவது என்பது தேர்தல் வரும்போது கருணாநிதி காலம் தொட்டு திமுக கடைபிடிக்கும் உத்தி. தமிழக மக்கள் விழிப்புடன் இருப்பதாலும், எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளதாலும் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.
தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் திருமாவளவன், இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொடர்வது தான் ஒவ்வாத கூட்டணி. திமுக கூட்டணியில் பிரச்சினை இருந்தால், திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்கத் தயாராக உள்ளோம்.
மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்றாரா அல்லது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாரா என்பது ஆண்டவனுக்கும், ஆட்சியருக்கும் மட்டும்தான் தெரியும். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு அப்பாற்பட்ட கட்சி. தேசியத்தையும், தெய்வீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது அதிமுக – பாஜக கூட்டணி.
பட்டாசு தொழிலை பயங்கரவாத தொழிலாக பார்க்கும் நிலை இந்த ஆட்சியில் உள்ளது. பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி விபத்து உரித்து ஆய்வு செய்து பிரச்சினைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தொழிலை நசுக்குகின்ற வேலையை செய்தால் அதிமுக நிச்சயம் எதிர்க்கும்.
‘தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்’ யாத்திரையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 4,5,6 மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி, பட்டாசு தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார்.
தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. விஜய் நிலைப்பாட்டில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பேசினார்.
“கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாகத் தான் இருக்கும்.” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அண்மையில் நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.