பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த கோயிலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து தர்மஸ்தலா கோயிலில் துப்புரவு பணியாற்றிய 52 வயதான ஒருவர், போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து தர்மஸ்தலா போலீஸார் கோயில் நிர்வாகத்தின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து 65 வயதான பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘‘கடந்த 2003ம் ஆண்டு தர்மஸ்தலா கோயிலுக்கு சென்ற தனது 22 வயது மகள் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த போது, என்னை தாக்கி சித்ரவதை செய்தனர். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, வழக்கறிஞர் வேலன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர்.
இதையடுத்து கர்நாடக அரசு, ‘‘தர்மஸ்தலா பாலியல் கொலை வழக்கு சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. டிஜிபி பிரனாப் மொஹந்தி தலைமையிலான குழுவினர் வழக்கு குறித்து விசாரித்து, அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும்” என தெரி வித்துள்ளது.