Sanju Samson ; ஐபிஎல் 2025 சீசன் முடிந்ததில் இருந்து, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவது குறித்து பல யூகங்கள் எழுந்தன. இந்த டிரேடிங் தொடர்பான வதந்திகளுக்கு சாம்சன் தனது பதிலில் எந்தவொரு தெளிவான மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், அவர் ராஜஸ்தானை விட்டு வெளியேறுவது உறுதி என்பதை பலரும் நம்பத் தொடங்கினர். ஏனென்றால், அப்படி எந்த திட்டமும் இல்லையென்றால், இந்த வதந்திகளை சஞ்சு சாம்சன் மறுத்திருப்பார். ஆனால், சாம்சன் அதை செய்யவில்லை.
இப்போது ஐபில் அணிகளுக்கு இடையிலான பிளேயர் டிரேடிங் திறந்துவிட்டதால் சாம்சன் உட்பட பல முன்னணி வீரர்களை மையமாக வைத்து யூகங்கள் அதிகரித்துள்ளன. ஐபிஎல் அணிகளின் பொறுப்புகளில் இருப்பவர்கள் இதுதொடர்பாக சூசகமாக பதிவிடும் கருத்துகள், பிளேயர்கள் டிரேடிங் தொடர்பான தகவல்கள் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. கடந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அணிகள் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்வதால், வீரர்கள் பரிமாற்றம் குறித்த பேச்சுக்கள் மேலும் சூடுபிடித்து வருகின்றன.
ஐபிஎல் 2026 சீசனில் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக சாம்சம் சிஎஸ்கே-விற்கு மாறத் தயாராகி வருவதாக வதந்திகள் ஆணித்தரமாக பரவுகின்றன. ஏனென்றால், ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான நிலை ஏற்பட்டது. வெறும் எட்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்தனர். இது, அந்த அணியின் வரலாற்றிலேயே மிக மோசமான ஆட்டமாகவும் அமைந்தது.
அதே சமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தடுமாறி, அதே எட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. சாம்சனின் காயத்தால் அவருடைய ஆட்டமும் பாதிக்கப்பட்டது. இரு அணிகளும் தங்களை மீண்டும் வலுப்படுத்தத் திட்டமிடுவதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மீது சிஎஸ்கே காட்டிய ஆர்வம், 2026 சீசனுக்கு முன்னதாக ஒரு பெரிய செய்தியாக மாறியுள்ளது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது. இருப்பினும், கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவருக்கு ஒரு கடினமான சீசனாக இது அமைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. சாம்சனின் தனிப்பட்ட ஆட்டமும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை. அவர் ஒன்பது போட்டிகளில் விளையாடி, 35.62 சராசரியுடன் 140.39 ஸ்ட்ரைக் ரேட்டில் 285 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரே ஒரு அரை சதம் அடித்தார்.
அவரது கடந்த ஐபிஎல் சீசன் காயங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது. முதல் மூன்று போட்டிகளில் இம்பாக்ட் பிளேயராக தொடங்கிய அவர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐந்து போட்டிகளில் இருந்து விலகினார். அவர் இல்லாத நேரத்தில், ரியான் பராக் கேப்டனாக பொறுப்பேற்றார். சாம்சன் முதலில் 2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார். பின்னர், 2015 முதல் 2017 வரை டெல்லி அணிக்காக விளையாடிவிட்டு, 2018-ல் மீண்டும் ராஜஸ்தான் அணிக்குத் திரும்பினார். அதன்பிறகு அந்த அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறப் போவதாக வெளியான வதந்திகள் குறித்து மலையாளத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, சஞ்சு சாம்சன் “ஒன்னும் பரயானில்லா” (சொல்ல ஒன்றுமில்லை) என்று பதிலளித்தார். அவரது இந்த பதில் மேலும் பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. ஏனெனில், இந்த வதந்திகளில் உண்மை இல்லை என்றால், அவர் அதை வெளிப்படையாக மறுத்திருப்பார் என்று பலர் குறிப்பிட்டனர். சாம்சனிடமிருந்து எந்தவொரு தெளிவான உறுதிப்படுத்தலோ அல்லது மறுப்போ இல்லாததால், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இப்போது ஐபிஎல் வீரர்களை தக்கவைக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேற வாய்ப்பிருப்பதற்கான முக்கிய காரணங்களாக பார்த்தால், காயம் காரணமாக அவர் இல்லாத நேரத்தில், அவரது விருப்பமான தொடக்க இடம் வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டது, மேலும் தலைமைப் பதவிக்கான அணிக்குள் போட்டியும் உருவாகியிருப்பதால், சாம்சன் வாய்ப்பு கிடைத்தால் வேறு அணிக்கு செல்லும் முடிவில் இருபதாக தெரிகிறது.