'அந்த முகமும், அந்த உதடுகளும்…' வெள்ளை மாளிகை ஊடக செயலாளரை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறை அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக 27 வயது இளம்பெண் கரோலின் லெவிட்டை நியமனம் செய்வதாக கடந்த நவம்பர் 15-ந்தேதி அறிவித்தார். இதன் மூலம் இளம் வயதில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளராக பதவியேற்ற பெண் என்ற பெருமையை கரோலின் லெவிட் பெற்றார்.

வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பு மூலமாக அமெரிக்க அரசின் செயல்திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து விளக்கி வரும் கரோலின் லெவிட், இந்தியா-பாகிஸ்தான் போரை போல் பல போர்களை டொனால்டு டிரம்ப் நிறுத்தியுள்ளார் எனவும், ரஷியா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம் உள்ளிட்ட மோதல்களை முடிவுக்கு கொண்டு வர அவர் கடுமையாக உழைத்து வருகிறார் என்றும் கூறியிருந்தார்.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய கரோலின் லெவிட், “அதிபர் டிரம்ப் தனது ஆறு மாத பதவிக்காலத்தில் சராசரியாக மாதத்திற்கு ஒரு சமாதான பேச்சுவார்த்தை அல்லது போர்நிறுத்தத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அதிபர் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் அண்மையில் பேட்டி ஒன்றில் கரோலின் லெவிட்டின் செயல்பாடுகள் குறித்து பேசியபோது, “அவர் மிகவும் பிரபலமானவராக மாறிவிட்டார். அந்த முகமும், அந்த மூளையும், அந்த உதவுகளும், அவை அசையும் விதமும் ஒரு இயந்திர துப்பாக்கி போல் செயல்படுகின்றன. கரோலின் லெவிட் மிகச்சிறந்த பெண்மணி. அவரை விட மிகச்சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது” என்று புகழாரம் சூட்டினார். வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி குறித்து டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.