இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான தோனி ஐபிஎல் 2026 சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பதே அவருடைய ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தாலும் அணியில் உள்ள யாருமே சரியான பெர்பாமென்ஸை கொடுக்கவில்லை. அதன் காரணமாக சென்னை அணி பல போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
தோனி ஓய்வா?
ஐபிஎல் தொடர் முடிந்ததும் தோனியிடம் ஓய்வை அறிவிக்கப் போகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தோனி, இன்னும் இதனை தெரிவிப்பதற்கான நேரம் இருக்கிறது என்று சூசகமாக சொல்லி இருந்தார். அடுத்த ஆண்டு என்னுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய தோனி, தனது கண் பார்வை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இருப்பினும் என்னுடைய உடல்நிலை குறித்து முழுமையான தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தோனி சொன்ன முக்கிய தகவல்
“அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு என்னுடைய கண் பார்வையில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் என்னுடைய உடல் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. என்னால் என்னுடைய கண்களை மட்டும் வைத்து கிரிக்கெட் விளையாட முடியாது. எனது உடல் குறித்த முழு தகவல்கள் வந்தவுடன் அடுத்து விளையாடுவதா? வேண்டாமா? என்பதை பற்றி முடிவு எடுப்பேன்” என்று தோனி தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மேலும் பேசிய தோனி, “கடந்த ஐபிஎல் சீசனில் எங்களது பேட்டிங் ஆர்டர் மிகவும் கவலை அளித்தது. ஆனால் தற்போது அது ஓர் அளவிற்கு சரி செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறன். அடுத்த சீசனில் கேப்டன் ருதுராஜ் கைகுவாட் வந்துவிடுவார், அவர் வந்ததும் அனைத்தும் சரி செய்யப்படும். சிஎஸ்கே அணியில் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு சில இடங்களில் மாற்று வீரர்கள் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் மினி ஆக்ஷனில் அவை சரி செய்யப்படும்” என்றும் தோனி தெரிவித்து இருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக தோனி நான்கு கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார் .14 போட்டிகளில் விளையாடிய தோனி 196 ரன்கள் அடித்து இருந்தார். தற்போது தோனி பேசியுள்ள வார்த்தைகளை வைத்து அவர் அடுத்த ஆண்டு விளையாடுவாரா மாட்டாரா என்பதை பற்றிய முழுமையான தகவல் இல்லை. தற்போது 44 வயதாகும் தோனி விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.