Ind vs Eng: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி தொடரை விளையாடி முடித்திருக்கிறது. இத்தொடரில் இந்தியா இரண்டு போட்டிகள் இங்கிலாந்து இரண்டு போட்டிகள் மற்றும் ஒரு போட்டி டிராவில் முடிந்ததால், தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்த தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. குறிப்பாக காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் ஒற்றை கையுடன் பேட்டிங் செய்ய வந்தது ரசிகர்கள் இடையே வியப்பையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியது.
கன்கஷன் சப்ஸ்டிடியூட் ரூல்
முன்னதாக 4வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் காயத்துடன் களம் இறங்கி அரைசதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கன்கஷன் சப்ஸ்டிடியூட் இருப்பதை போல், காயத்திற்கும் மாற்று வீரரை களமிறக்கும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என்ற விவாதம் தொடங்கியது. அதாவது, கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு தலையில் அடிப்பட்டால் மட்டுமே மாற்று வீரரை களம் இறக்க முடியும். ஆனால் மற்ற இடங்களில் அடிப்படும் பட்சத்தில் மாற்று வீரரை களமிறக்க முடியாது என்ற ரூல் உள்ளது.
மற்ற இடங்களிலும் அடிப்பட்டால், மாற்று வீரரை களம் இறக்கும் விதியை கொண்டு வர வேண்டும் என்ற வாதத்திற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் ஆதரவு தெரிவித்தார். ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இது ஒரு ஆபத்தான் யோசனை. ஏனென்றால் இந்த விதியில் உள்ள சிக்கலை சில அணிகள் பயன்படுத்தக்கூடும். சோர்வாக இருக்கும் வீரர்களையும் மாற்ற நினைப்பார்கள் என கூறினார்.
ஸ்டோக்ஸ் சிந்தித்து பேச வேண்டும்
இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸின் இந்த பேச்சுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நானும் பென் ஸ்டோக்ஸின் ரசிகர்தான். ஆனால் பென் ஸ்டோக்ஸ் பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்து பேச வேண்டும். கிறிஸ் வோக்ஸ் இன்று தனது காயத்தை பற்றி எந்த கவலையும் இன்றி களம் இறங்கினார். அவருக்கு சல்யூட். ஆனால் ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரர் இங்கிலாந்து அணியில் இருந்தால், அவருக்கு மாற்று வீரர் எடுத்துக்கொள்ளலாம் என்றால், அதனை ஸ்டோக்ஸ் வேண்டாம் என்பாரா?
கர்மா பதிலடி கொடுக்கும்
அனைவருக்குமே தங்களது கருத்துகளை சொல்வதற்கு உரிமை இருக்கிறது. ஆனால்,. கருத்துகளை சொல்லும்போது வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும். ஆபத்து, ஜோக் என்ற வார்த்தைகள் எல்லாம் சரியானதா? அவர் சிந்தித்து பேசவில்லை என்றால், கர்மா பதில் கொடுக்கும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: விராட் கோலியுடன் காதல்? பாகிஸ்தான் வீரருடன் திருமணம்? தமன்னாவே சொன்ன விஷயம்!
மேலும் படிங்க: சிராஜை வாழ்த்திய பெண் பிரபலம்.. யார் இந்த ஜனாய் போஸ்லே? இருவருக்கும் என்ன உறவு?