India National Cricket Team: இந்திய அணி (Team Idia) தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. இங்கிலாந்தில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்திய அணிக்கு ரெஸ்ட்தான்.
Asia Cup 2025: அடுத்து ஆசிய கோப்பை தான்
ஆகஸ்டில் திட்டமிடப்பட்டிருந்த வங்கதேச சுற்றுப்பயணம் அரசியல் காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆகஸ்டில் இந்தியா எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. இந்திய அணி அடுத்து செப்டம்பர் தொடக்கத்தில் டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரிலேயே விளையாட இருக்கிறது.
Team India: ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் விராட், ரோஹித்
இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியில் விராட் கோலியும் (Virat Kohli), ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) விளையாடி சுமார் 5 மாதங்கள் இருக்கும். அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடவே இல்லை. சமீபத்தில் இவர்கள் டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டதால் இங்கிலாந்து தொடரிலும் விளையாடவில்லை. ஏற்கெனவே இருவரும் டி20இல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் வரும் ஆசிய கோப்பை தொடரிலும் விளையாடப்போவதில்லை.
இதனால், அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மட்டும் விராட் கோலி (36), ரோஹித் சர்மா (38) விளையாடுவார்கள் எனலாம். இவர்கள் இனி ஓடிஐ போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள் என்றாலும் வரும் 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை நீடிப்பார்களா என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது. ரோஹித் சர்மாதான் தற்போது இந்திய ஓடிஐ அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். ஒருவேளை இப்போதே இவரை நீக்கிவிட்டு சுப்மான் கில்லுக்கோ அல்லது ஷ்ரேயாஸ் ஐயருக்கோ ஓடிஐ கேப்டன்ஷிப்பை பிசிசிஐ வழங்குமா என்ற கேள்வியும் இருக்கிறது.
Team India: இன்னும் 24 ஓடிஐ போட்டிகள்
2027 உலகக் கோப்பை முன் வரை இன்னும் 24 ஓடிஐ போட்டிகள் மட்டுமே உள்ளன. அதிலும் ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள், இங்கிலாந்தில் 5 போட்டிகள் என 8 போட்டிகள் மட்டுமே வெளிநாட்டில் நடைபெறுகின்றன. மீதம் உள்ள 16 போட்டிகளிலும் இந்தியாவில்தான் நடக்கின்றன. விராட் கோலி, ரோஹித் சர்மா இந்த 24 போட்டிகளையும் விளையாடி உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவார்களா அல்லது டெஸ்டில் ஓய்வை அறிவித்ததை போன்று திடீரென ஓடிஐ அரங்கிலும் ஓய்வு பெற்று கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டுவிடுவார்களா என்ற அச்சமும் பலருக்கும் இருக்கிறது.
Team India: ரோஹித், விராட் கிரிக்கெட் எதிர்காலம்
இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தரப்பு, “ஆம், இது (ரோஹித், விராட் எதிர்காலம்) குறித்து விரைவில் விவாதிக்கப்படும். அடுத்த உலகக் கோப்பைக்கு (நவம்பர் 2027) இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. அப்போது கோலி மற்றும் ரோஹித் இருவரும் 40 வயதை நெருங்குவார்கள். 2011ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றாததால் அந்த தொடருக்கு முன்னதாக ஒரு தெளிவான திட்டம் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் சில இளம் வீரர்களையும் அணியில் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
கோலி மற்றும் ரோஹித் இருவரும் இந்திய அணிக்கும், பொதுவாக கிரிக்கெட்டுக்கும் குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட அனைத்தையும் சாதித்துள்ளனர். எனவே, யாரும் அவர்களை (ஓய்வை நோக்கி) கட்டாயப்படுத்தப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால் அடுத்த ஒருநாள் போட்டிகளின் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு சில நேர்மையான மற்றும் தொழில்முறையான உரையாடல்கள் இருக்கும், மற்றவை அதைப் பொறுத்தே அமையும்” என தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ‘பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம்’.. பென் ஸ்டோக்ஸை எச்சரித்த அஸ்வின்!
மேலும் படிக்க | சிராஜை வாழ்த்திய பெண் பிரபலம்.. யார் இந்த ஜனாய் போஸ்லே? இருவருக்கும் என்ன உறவு?
மேலும் படிக்க | சாய்னா நேவால் விவாகரத்து வாபஸ்? மீண்டும் முயற்சி செய்வதாக வெளியிட்ட பதிவு!