ரோகித் வேண்டாம்.. இந்த வீரரை ODI கேப்டன் ஆக்குங்க! பெருகும் ஆதரவு

Next ODI Captain: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடியது. இத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முடிவடைந்தது. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வென்றது. நான்காவது போட்டி டிராவானது. இதையடுத்து 5வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கி அதை செய்துக்காட்டியது. கடைசி வரை இங்கிலாந்துக்கு சாதகமாக சென்ற 5வது போட்டியை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 

முன்னதாக டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படும்போது, பலரும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். ரிஷப் பண்ட், கே. எல். ராகுல் போன்ற வீரர்கள் இருக்கும்போது சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவியை கொடுப்பது சரி இல்லை என்றும் வெளிநாட்டு மண்ணில் பெரிதாக ரன்கள் சேர்க்க வீரருக்கு கேப்டன்சி கொடுப்பது நியாயம் கிடையாது என்றும் கூறி வந்தனர். ஆனால் சுப்மன் கில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக இந்திய அணியை தோல்வியடையாமல் பார்த்துக்கொண்டார். 

அதே சமயம் பேட்டிங்கிலும் ரன்களை குவித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். குறிப்பாக இரண்டாவது போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து அசத்தினார். இத்தொடரில் அவர் 754 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இதன் மூலம் தன்னால் பேட்டிங்கில் ரன்களை குவிக்க முடியும் என்றும் கேப்டனாக நியமித்தது சரி என்றும் கில் நிரூபித்துள்ளார். 

இந்த நிலையில், சுப்மன் கில்லை ஒருநாள் கிரிக்கெட்டிலும் கேப்டனாக நியமிக்கலாம் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சுப்மன் கில் ஒருநாள் கேப்டன்ஷி பொறுப்பையும் பெறுவார். ஏனென்றால் ரோகித் சர்மா  எவ்வளவு காலம் கேப்டனாக தொடர்வார் என்பது தெரியாது. சுப்மன் கில் அடுத்த கேப்டனாக தயாராக உள்ளார். ஏற்கனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் அவர், டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி உள்ளார். கில்லுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கினார். 

டெஸ்ட் கேப்டனாக அவரை நியமிக்கும்போது, பலரும் அவருக்கு எதிராக கேள்வி எழுப்பினர். ஆனால் கேப்டனாக சென்று பலரின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார் என முகமது கைஃப் கூறினார். தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவுக்கு 37 வயதாகி விட்டது. இதனால் அவர் எவ்வளவு காலம் விளையாடுவார் என்பது தெரியாததால், முகமது கைஃப் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: இந்த வீரர் தேவையில்லை.. CSK நிர்வாகம் அதிரடி முடிவு?

மேலும் படிங்க: ஏழை மாணவிக்கு ரிஷப் பண்ட் உதவிகரம்.. கல்லூரி கனவு நினைவானது!

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.