சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் இன்று தொடங்கி வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நூற்றாண்டு கால பழமைவாய்ந்த இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

ஆண்கள் ஒற்றையரில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி), 2-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிரிட்ஸ், பென் ஷெல்டன் (அமெரிக்கா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), ஹோல்கர் ருனே (டென்மார்க்), மெட்விடேவ் (ரஷியா) உள்ளிட்டோர் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகிறார்கள். இதில் பட்டம் வெல்வதில் டாப்-2 வீரர்களான சினெர்- அல்காரஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் பிரிவில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் அரினா சபலென்கா 2-ம் நிலை வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), விம்பிள்டன் சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து), ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா, அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), ஸ்விடோலினா (உக்ரைன்), எம்மா ரடுகானு (இங்கிலாந்து), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் வரிந்து கட்டுகிறார்கள்.

இவர்களுக்கு ‘பை’ சலுகை வழங்கப்பட்டுள்ளதால் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுவார்கள். 45 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சும் கோதாவில் குதிக்கிறார். அவர் முதல் சுற்றில் ஸ்பெயினின் ஜெசிகா பவுசாஸ் மனேரோவுடன் மோதுகிறார்.

இதில் மகுடம் சூடும் வீரருக்கு ரூ.9.75 கோடி பரிசுத்தொகையுடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளும், வீராங்கனைக்கு ரூ.6.5 கோடியுடன், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். ஒலிம்பிக் சாம்பியன்களான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், சீன வீராங்கனை கின்வென் ஜாங் ஆகியோர் இந்த போட்டியில் இருந்து விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.