இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் முடிவடைந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்தது. இந்த தொடரில், சுப்மன் கில் அதிக ரன்களை குவித்தும், முகமது சிராஜ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியும் இந்திய அணிக்கு வலு சேர்த்தனர். இருப்பினும், சில முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம், அணி நிர்வாகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் விளைவாக, அந்த வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
What makes this team so special?
Hear it from #TeamIndia Captain Shubman Gill #ENGvIND | @ShubmanGill
— BCCI (@BCCI) August 5, 2025
அணியில் இருந்து நீக்கப்படும் மூன்று வீரர்கள்
ஷர்துல் தாக்கூர்
சுமார் 18 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான ஷர்துல் தாக்கூருக்கு, இந்த தொடர் ஒரு மோசமான அனுபவமாகவே அமைந்தது. டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பையின் 5 போட்டிகளில், இரண்டில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி, அவர் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி, 72 என்ற அதிக சராசரியில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மேலும், 3 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால், அணியில் அவரது இடம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
சாய் சுதர்சன்
இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில் சிறப்பாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை வென்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் வீரரான சாய் சுதர்சனுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஐபிஎல்-லில் காட்டிய அதிரடியை, இங்கிலாந்தின் கடினமான சூழலில் அவரால் காட்ட முடியவில்லை. சாய் சுதர்சன் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில், 6 இன்னிங்ஸ்களில் வெறும் 140 ரன்களை மட்டுமே, 23.33 என்ற சுமாரான சராசரியில் எடுத்தார். இதில் இரண்டு முறை டக் அவுட் ஆகி உள்ளார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது எதிர்காலம் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பிரசித் கிருஷ்ணா
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய போதிலும், ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு ஏமாற்றமாகவே இருந்தது. சில சமயங்களில் அதிக ரன்களை வாரி வழங்கியதால், தொடரின் நடுவில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். மூன்று போட்டிகளில் பங்கேற்று 14 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவரது பந்துவீச்சு சராசரி 37.07 ஆக இருந்தது. இது, இந்திய அணியின் நீண்ட கால டெஸ்ட் திட்டங்களில் அவரது பங்கு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.