புதுடெல்லி: காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும், அங்கு நடக்கும் பெரும்பாலான கொலைகளுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகளே காரணம் என்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய அரசால் பாலஸ்தீனத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள்.
அதோடு, நூற்றுக்கணக்கானவர்களை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது. இதில் பலர் குழந்தைகள். மேலும், பல லட்சம் பேர் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் மரணத்தை நெருங்கும் அபாயம் உள்ளது. இந்தக் குற்றங்களை மவுனமாக செயல்படுத்துவது மட்டுமல்லாது, அவற்றை வேடிக்கை பார்ப்பதும்கூட ஒரு குற்றமாகும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது” என கூறி இருந்தார்.
பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவை டேக் செய்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் பதில் அளித்துள்ளார். அவரது அந்த பதிவில், “வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், உங்கள் வஞ்சகம்தான். இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது. பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது ஹமாஸின் கொடூரமான தந்திரங்கள். வெளியேற அல்லது உதவி பெற முயற்சிக்கும் மக்களைச் சுடுவது, அவர்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது ஆகியவை காரணமாகவே பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
காசாவுக்கு 20 லட்சம் டன் உணவை இஸ்ரேல் வழங்கியது. அதேநேரத்தில், அவற்றைக் கைப்பற்ற ஹமாஸ் முயல்கிறது, இதன்மூலம் பட்டினியை உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450% அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அல்ஜசீரா தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதற்கும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், “அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஐந்து பத்திரிகையாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது, பாலஸ்தீன மண்ணில் நிகழ்ந்துள்ள மற்றொரு கொடூரமான குற்றமாகும்.
உண்மைக்காக நிற்கத் துணிந்தவர்களின் அளவிட முடியாத தைரியத்தை, இஸ்ரேலிய அரசின் வன்முறை மற்றும் வெறுப்பால் ஒன்றும் செய்ய முடியாது. ஊடகங்களில் பெரும்பாலானவை அதிகாரத்துக்கும் வர்த்தகத்துக்கும் அடிமைப்படுத்தப்பட்ட உலகில், இத்தகைய துணிச்சலான ஆன்மாக்கள் உண்மையான பத்திரிகை என்றால் என்ன என்பதை நமக்கு நினைவூட்டி உள்ளன. அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.